×

ஊரடங்கு காலத்தில் தொழில் முடக்கத்தால் நிவாரண உதவிக்கு ஏங்கும் ஒரு கோடி பீடித்தொழிலாளர்கள்: மத்திய, மாநில அரசுகள் மீது குற்றம்சாட்டும் தொழிற்சங்கங்கள்

வேலூர்: ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள நாடு முழுவதும் உள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட பீடித்தொழிலாளர்களின் குடும்பங்கள் மத்திய, மாநில அரசுகளின் நிவாரண உதவி ஏதும் கிடைக்காமல் தவிப்புக்கு ஆளாகியுள்ளதாக தொழிற்சங்கங்கள் வேதனை தெரிவித்துள்ளன. கொரோனா வைரஸ் பரவலால் உலகமே அதிர்ந்து நிற்கும் நிலையில், இயல்பு நிலை எப்போது திரும்பும் என்பது தெரியாத நிலையில் அனைத்து நாடுகளுமே ஊரடங்கை அமல்படுத்தியதுடன் தங்கள் குடிமக்களுக்கான நிவாரணத்துக்காக தங்கள் கஜானாவை திறந்து விட்டுள்ளன. இந்தியாவிலும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிவாரண உதவிகளை அறிவித்துள்ளன. அதேநேரத்தில் இந்தியாவில் குடிசைத்தொழில்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள பீடித்தொழிலில் தமிழகம், கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம், தெலங்கானா, ஆந்திரம், ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம் என பல மாநிலங்களில் 1 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன. இவர்களுக்கான நிவாரண உதவிகள் எதுவும் மத்திய, மாநில அரசுகளால் இதுவரை வழங்கப்படவில்லை என்று பீடித்தொழிலாளர் சங்கங்கள் வேதனை தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் திருநெல்வேலி, வேலூர், திருவள்ளூர், தூத்துக்குடி, காஞ்சிபுரம், ஈரோடு, கன்னியாகுமரி, சேலம், சென்னை, திருவண்ணாமலை மாவட்டங்களில் என மொத்தமாக 1 லட்சம் குடும்பங்கள் பீடித்தொழிலை நம்பியுள்ளன. கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு பீடித்தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் ெகாண்டு வரப்பட்டாலும் அதில் 50 முதல் 60 சதவீதம் பேரே இணைந்துள்ளனர். அதோடு மத்திய, மாநில அரசின் நலத்திட்டங்கள் தனி. இதற்காக பீடித்தொழிலாளர் மருத்துவமனைகள், தொழிலாளர் நல அலுவலர்களும் உள்ளனர்.  மத்திய அரசை பொறுத்தவரை பீடித்தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்களை பெற்றுத்தரும் பணியில் பீடித்தொழிலாளர் மருந்தகங்கள் உள்ளன. இதற்காக அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மாநில அரசின் சார்பில் தொழிலாளர் நல அலுவலர்கள் உள்ளனர். இந்த நிலையில் கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு மே 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகள், கட்டுமானம், ஆட்டோ தொழிலாளர் உட்பட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகளை அறிவித்துள்ளன. ஆனால், அமைப்புரீதியாக செயல்படும் பீடித்தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி ஏதும் இதுவரை வழங்கப்படவில்லை. எனவே ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பீடித்தொழிலாளர்களுக்கு செக் மூலம் வசூலிக்கப்பட்டு இருப்பில் உள்ள பல நூறு கோடியில் இருந்து தலா ₹5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இத்தகைய சூழலில் பீடித்தொழிலாளர்களிடம் இருந்து சேமநல அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை பெற்று மாநில அரசின் நிவாரண உதவிக்காக சமர்ப்பிக்க தொழிலாளர் நல ஆணையரகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதேநேரத்தில் அரசின் பி.எப்  திட்டத்தில் இணையாத, சேமநல அடையாள அட்டை இல்லாத பீடித்தொழிலாளர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையின்றி பரிதவித்து வரும் பீடித்தொழிலாளர்கள் அனைவருக்கும் பாகுபாடின்றி நிவாரண உதவி வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இதுதொடர்பாக தமிழ்நாடு பீடித்தொழிலாளர் சம்மேளன தலைவர் எம்.பி.ராமச்சந்திரன், ஐஎன்டியுசி பீடித்தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஏகாம்பரம் ஆகியோரிடம் கேட்டபோது, ‘பீடித்தொழிலாளர்களுக்கு இதுவரை நிவாரணம் ஏதும் வழங்கப்படவில்லை. சேமநல நிதியில் இருந்து ஒவ்வொருவருக்கும் ₹5 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும் பீடித்தொழிலாளர்களில் 50 சதவீதம் பேரே பி.எப் திட்டத்தில் இணைந்துள்ளனர். இந்நிலையில் தொழிலாளர் நல ஆணையர் சார்பில் சேமநல அடையாள அட்டை, ஆதார், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை பீடித்தொழிலாளர் மருத்துவமனைகள் மூலம் கேட்கப்பட்டு வருகிறது. இதில் அடையாள அட்டை பெறாதவர்களின் நிலையையும் கருத்தில் கொள்வதுடன், நிவாரண உதவியை விரைந்து வழங்க வேண்டும்’ என்றனர்.

* அமைப்புரீதியாக செயல்படும் பீடித்தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி ஏதும் இதுவரை வழங்கப்படவில்லை
* சேமநல நிதியில் இருந்து ஒவ்வொருவருக்கும் ₹5 ஆயிரம் வழங்க வேண்டும்.


Tags : philanthropists ,event ,state ,curfew ,governments ,unions ,state governments ,disaster , One billion philanthropists,disruption in the curfew,Trade unions blaming central,state governments
× RELATED உங்க 10 ஆண்டு ஆட்சியில் எல்லாமே போச்சு…...