×

எஸ்பி - மதுவிலக்கு டிஎஸ்பி மாறி, மாறி உத்தரவு: குழம்பி தவித்த திண்டுக்கல் போலீசார்

* ‘குடை இருந்தால்தான் குவார்ட்டரு... குடை இல்லாட்டியும் குடுக்கணும்...’

திண்டுக்கல்: குடையோடு வருபவர்களுக்கே மதுபானங்களை வழங்க வேண்டுமென எஸ்பியும், குடை இல்லாமல் வருபவர்களுக்கு கொடுக்க வேண்டுமென மதுவிலக்கு டிஎஸ்பியும் மாறி, மாறி போட்ட உத்தரவால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், மண்டை காய்ந்த விவகாரம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது. திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் மது பானங்களை வாங்க டாஸ்மாக் கடைகளில் ஏராளமானோர் திரண்டனர். கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக எஸ்பி சக்திவேல், மது வாங்க வரும்போது குடை கொண்டு வரவேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து நேற்று காலை திண்டுக்கல், சத்திரம் தெருவில் உள்ள மதுபான கடைக்கு வந்த ஒரு சில நபர்கள் குடையுடன் வந்து வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி சென்றனர். பலர் குடை கொண்டு வராமல் மதுபானம் வாங்க கடைக்கு வந்து வரிசையில் நின்றனர்.

அப்போது அந்தப் பகுதியில் ரோந்து வந்த திண்டுக்கல் நகர் டிஎஸ்பி மணிமாறன், குடை இல்லாமல் வரிசையில் நின்ற நபர்களை விரட்டியடித்தார். இதனால் கடையில் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. அப்போது அந்த வழியாக மதுவிலக்கு டிஎஸ்பி பொன்னுசாமி வந்தார். கடையில் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி இருப்பதை கண்ட அவர், ‘‘குடை கொண்டு வராவிட்டாலும் பரவாயில்லை. இடைவேளை விட்டு நின்று மது பிரியர்கள் கடைக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும்’’ என அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் உத்தரவு பிறப்பித்து விட்டு சென்றார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், எந்த உத்தரவை பின்பற்றுவது என தெரியாமல் குழம்பி போய் நின்றிருந்தனர். மதுவிலக்கு டிஎஸ்பியின் உத்தரவினால் குடை இல்லாமல் வந்த ‘மதுப்பிரியர்கள்’ குஷியுடன் மதுபானங்களை வாங்கி சென்றனர்.


Tags : policemen ,SP ,Dindigul , SP - Alcohol ,DSP Alternate, Variable Directive: Dindigul policemen, confused
× RELATED திருவாரூர் ஆழித்தேரோட்டத்திற்கு 2000 போலீசார் பாதுகாப்பு