×

ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலின் அடிப்படை விலை ரூ.18 மட்டுமே: 69 சதவீதம் வரி நிர்ணயித்து விற்பனை

சேலம்: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், சவூதிஅரேபியா, ஈரான், ஈராக் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய்யை பீப்பாய் கணக்கில் கொள்முதல் செய்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு, இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலையை நிர்ணயிக்கின்றனர். பெட்ரோல், டீசலுக்கான அடிப்படை விலை, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப அவ்வப்போது மாறுபடும். இந்த அடிப்படை விலையில் இருந்து கூடுதலாக மத்திய, மாநில அரசுகள் கலால் வரி, வாட் வரி போன்றவற்றை விதித்து பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து விற்கின்றனர்.

கடந்த 2 மாதமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கொரோனா பாதிப்பின் காரணமாக கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஒரு பீப்பாயின் விலை 20 டாலருக்கும் கீழ் சரிந்து விட்டது. இதனால், பெட்ரோல், டீசலுக்கான அடிப்படை விலையும் கடுமையாக குறைந்துள்ளது. ஆனால், அதன் பலனை எண்ணெய் நிறுவனங்கள், பயனாளர்களான மக்களுக்கு அளிக்கவில்லை. காராணம், மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி, வாட் வரி போன்றவற்றை அடுத்தடுத்து உயர்த்திக் கொண்டன. இதன்காரணமாக பெட்ரோல், டீசல் விலை நாடு முழுவதும் ₹70க்கு கீழ் குறையாமல் இருக்கிறது. இந்நிலையில் கடந்த 6ம் தேதி பெட்ரோல், டீசலுக்கான அடிப்படை விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்துள்ளது. இதன்படி தற்போது, ஒரு லிட்டர் பெட்ரோலின் அடிப்படை விலை ₹17.96 ஆகவும், ஒரு லிட்டர் டீசலின் அடிப்படை விலை ₹18.49 ஆகவும் இருக்கிறது. இதுவே டீலருக்கான பெட்ரோல் மற்றும் டீசலின் அடிப்படை விலையாக முறையே ₹18.28, ₹18.78 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மீது தான், கலால் வரி, டீலர் கமிஷன், வாட் வரி ஆகியவை 69 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அடிப்படை விலையான ₹18.28 உடன், கலால் வரி ₹32.98, டீலர் கமிஷன் (சராசரி) ₹3.56, வாட் வரி ₹16.44 ஆகியவற்றை சேர்த்து ₹71.26க்கு விற்கின்றனர். இதுபோலவே ஒரு லிட்டர் டீசலுக்கு அடிப்படை விலையான ₹18.78 உடன், கலால் வரி ₹31.83, டீலர் கமிஷன் (சராசரி) ₹2.52, வாட் வரி ₹16.26 ஆகியவற்றை சேர்த்து ₹69.39க்கு விற்பனை செய்கின்றனர். மற்ற மாநிலங்களுக்கிடையே இவ்விலையில் மாற்றம் இருக்கும்.
வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் பெட்ரோல், டீசலுக்கு அதிகப்படியாக 69 சதவீத வரி விதிப்பு இந்தியாவில் தான் உள்ளது. இதன்காரணமாகவே பெட்ரோல், டீசல் விலை ₹70க்கு குறையாமல் இருந்து வருகிறது. எரிபொருளுக்கு என மக்கள் அதிக பணத்தை செலவிட வேண்டியிருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags : liter , basic price, liter , petrol , diesel , Rs.18: 69 per cent tax
× RELATED ஏப்ரல்-19: பெட்ரோல் விலை ரூ.100.75, டீசல் விலை ரூ.92.34க்கு விற்பனை