×

10 லட்சம் கருவிகள் ஆர்டர்: 1 லட்சம் RT-PCR சோதனை கருவிகள் தமிழகம் வந்தடைந்தது...கொரோனா பரிசோதனையை விரிவுபடுத்த சுகாதாரத்துறை தீவிரம்

சென்னை: தமிழகத்திற்கு மேலும் 1 லட்சம் RT-PCR சோதனை கருவிகள் வந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று நோய் பரவுவதை தடுக்க வருகிற மே 17ம் தேதி வரை ஊரடங்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை மதிக்காமல் பொதுமக்கள் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வருவது வாடிக்கையாக உள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. ஆனாலும்,  இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்வதில் தாமதம் ஆவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து விரைவாக பரிசோதனை நடத்துவதற்காக மத்திய அரசு, சீனாவில் இருந்து ரேபிட் டெஸ்ட் கிட் கருவியை பல லட்சம் கொள்முதல் செய்தது. இந்த கிட் ஒன்றின் விலை ரூ.600. தமிழகத்திற்கும் 34 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட்  கருவியை மத்திய அரசு அனுப்பி வைத்தது. இதையடுத்து சேலம், சென்னை உள்ளிட்ட சில நகர் பகுதிகளில் ரேபிட் கிட் மூலம் கடந்த சில நாட்களாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், பெரும்பாலும் தவறான தகவல்களே  வெளியாகிறது என்ற குற்றச்சாட்டை ராஜஸ்தான் மாநில அரசு பகிரங்கமாக அறிவித்தது. இதேபோன்று பல்வேறு மாநிலங்களில் இருந்தும் குற்றச்சாட்டு எழுந்ததால் மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்தது. நாடு முழுவதும் ரேபிட் கிட்  மூலம் பரிசோதனை செய்ய வேண்டாம். தொண்டையில் சளியை எடுத்து பரிசோதனை செய்யும் பிபிஆர் டெஸ்ட் மட்டுமே நடத்த வேண்டும்’’ என்றும் உத்தரவிட்டது.
 
இதற்கிடையே, தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றை கண்டறிவதற்காக RT-PCR கருவிகள் மூலம் தொடர் சோதனையை மாநில சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை, 2 லட்சத்து 16 ஆயிரத்து 416 மாதிரிகள்  சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், கூடுதல் சோதனை கருவிகள் வாங்க திட்டமிடப்பட்டது.

இதையடுத்து, மேலும் ஒரு லட்சம் RT-PCR சோதனைக் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. இந்த கருவிகள், தமிழகம் வந்து சேர்ந்த நிலையில், அனைத்து மாவட்ட மருத்துவமனைகளுக்கும் பிரித்து அனுப்பப்படும் என்றும், அதன் பிறகு தொடர்  சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மேலும் 10 லட்சம் RT-PCR சோதனைக் கருவிகளுக்கு தென்கொரியாவிடம் முன்பதிவு செய்துள்ளதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். அதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பரிசோதனையை விரிவுபடுத்துவதில் சுகாதாரத்துறை தீவிரமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu , 10 Lakh Tools Order: 1 Lakh RT-PCR Test Equipment Reached Tamil Nadu ...
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...