×

பக்கத்து வீட்டின் கேட் கம்பி குத்தி குடல் சரிந்து வாலிபர் உயிருக்கு போராட்டம்: மருத்துவக்கல்லூரியில் 2 மணி நேரம் ஆபரேஷன்

* நாகர்கோவிலில் நள்ளிரவில் ஏறிய போது தடுமாறி விழுந்தார்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் நள்ளிரவில் பக்கத்து வீட்டின் கேட் கம்பி குத்தி கிழித்ததில் குடல் சரிந்து உயிருக்கு போராடிய வாலிபருக்கு குமரி மருத்துவக்கல்லூரியில் 2 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. நாகர்கோவில் கோட்டார் செட்டி தெருவை சேர்ந்தவர் ராகேஷ் (29). நேற்று முன் தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் பக்கத்து வீட்டு கேட் மீது ஏறி செல்லும் போது திடீரென தவறி கேட் மீது விழுந்தார். இதில் அவரது விலா பகுதியில் கூர்மையான கம்பி புகுந்தது. அதில் சிக்கி கொண்டவரால் வெளியே வர முடியவில்லை. அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டு உரிமையாளர் மற்றும் அக்கம் பக்கத்தினர் வந்தனர். அவர்கள் ராகேசை மீட்க முயன்றனர். ஆனால் கம்பி விலா பகுதியில் ஆழமாக சென்று இருந்தது. இதனால் கோட்டார் போலீசாருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர்.

ஆம்புலன்சு பணியாளர்கள் வந்தும், மீட்க முடியவில்லை. இதையடுத்து சுமார் அரை மணி நேரத்துக்கு பின், நாகர்கோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணபாபு மேற்பார்வையில், நாகர்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் துரை தலைமையில் தீயணைப்பு படையினர் சென்றனர். கம்பியில் இருந்து எடுப்பது சிரமமாக இருக்கும் என்பதால், கம்பிகளை அறுத்து அப்படியே மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். தீயணைப்பு வண்டியில் இருந்த ஹைட்ராலிக் கட்டிங் இயந்திரம் மூலம் கம்பிகளை துண்டு, துண்டாக அறுத்து ராகேசை மீட்டனர். உடலில் துளைத் திருந்த கம்பிகளுடன், ஆம்புலன்சில் ஏற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், குடல் பகுதி முழுமையாக பாதிக்கப்பட்டு நுரையீரல் ஓட்டை வரை சுருங்கி இருந்தது தெரிய வந்தது. டீன் சுகந்தி ராஜகுமாரி உத்தரவின் பேரில் மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சையை தொடங்கினர். சுமார் 1 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. சுருங்கி போன நுரையீரல் பகுதி வெட்டப்பட்டு டியூப் பொருத்தப்பட்டுள்ளது. சரிந்த குடல் பகுதியில் தையல் போட்டு சரி செய்தனர்.  தற்போது ராகேஷ் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.  இந்த சம்பவத்தில் விரைந்து செயல்பட்ட தீயணைப்பு துறையினர் மற்றும் டாக்டர்கள் குழுவுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

விடிய, விடிய அறுவை சிகிச்சைகள் செய்த டாக்டர்கள்
டாஸ்மாக் கடை திறந்ததன் காரணமாக நேற்று முன் தினம் இரவில் அடி, தடி, கத்திக்குத்து, அரிவாள் வெட்டு, விபத்து என  ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரியில் 10 பேர் வரை அட்மிட் ஆனார்கள். ஆபத்தான நிலையில் வந்த 4 பேருக்கு விடிய, விடிய அறுவை சிகிச்சைகளை பணியில் இருந்த டாக்டர்கள் குழுவினர் செய்துள்ளனர். ஏற்கனவே கொரோனாவுக்காக தீவிர பணியாற்றி வரும் டாக்டர்கள், தற்போது டாஸ்மாக் கடைகள் திறந்ததால் தேவையில்லாமல் நிகழும் விபத்துக்கள், மோதல் சம்பவங்களால் கூடுதல் பணிச்சுமையை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே டாஸ்மாக் கடையை உடனடியாக அரசு மூட வேண்டும். போலீசார், டாக்டர்கள் கொரோனா தடுப்பு பணியில் முழு கவனம் செலுத்த வழிவகை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : neighbor ,house , Gate wire, stabbing , back , house
× RELATED அண்ணாமலை மீது கிரிமினல் வழக்குபதிவு...