×

குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.5.30 கோடிக்கு மது விற்பனை: 2 வது நாள் வேகம் குறைந்தது

நாகர்கோவில்: குமரியில் நேற்று முன் தினம் ஒரே நாளில் ரூ.5 கோடியே 30 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. ஆனால் நேற்று 2 வது நாள் டாஸ்மாக் கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 43 நாட்களாக அடைக்கப்பட்டு இருந்த டாஸ்மாக் கடைகள் நேற்று முன் தினம் திறக்கப்பட்டன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 111 டாஸ்மாக் கடையில், 101 டாஸ்மாக் கடைகள் திறந்து இருந்தன. கொரோனா உறுதி செய்யப்பட்டதால் தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட வில்லை. சரக்கு விற்பனைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. ஒருவருக்கொருவர் 6 அடி இடைவெளி விட்டு வரிசையில் நிற்க வேண்டும். ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும்.

காலை 10 மணி முதல் மதியம் 1 வரை 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணி வரை 50 வயதுக்குட்பட்டவர்களுக்கும், மாலை 3 மணியில் இருந்து மாலை 5 மணி  வரை 40 வயதுக்குட்பட்டவர்களுக்கும் மது விற்பனை நடைபெறும் என அறிவித்து இருந்தனர். ஆனால் இந்த விதிமுறை எல்லாம் கடைபிடிக்கப்பட வில்லை. கொரோனாவை கண்டு கொள்ளாத குடிமகன்கள் விற்பனை தொடங்கிய சிறிது நேரத்தில் சாரை, சாரையாக டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். ஆதார் அட்டைகள் இல்லாதவர்கள் வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டைகளை வைத்து இருந்தனர். போலீஸ் பாதுகாப்புடன் வரிசையில் நின்று உற்சாகத்துடன் மது வகைகளை வாங்கி சென்றனர்.

சில இடங்களில் டோக்கன் வினியோகம் நடந்தது. ஒரு நபருக்கு 4 குவார்ட்டர்  பாட்டில்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற உத்தரவு இருந்தும், சில டாஸ்மாக் கடைகளில் அதிகளவில் மது வகைகள் கொடுக்கப்பட்டன.நேற்று முன் தினம் ஒரே நாளில் ரூ.5 கோடியே 30 லட்சத்து 69 ஆயிரத்து 320 க்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. சாதாரண நாட்களில் வழக்கமாக ரூ.2.50 கோடிக்கு  தான் மது வகைகள் விற்பனை ஆகும். விடுமுறை நாட்கள், முக்கிய பண்டிகைகளில் ரூ.4 கோடி வரை மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. ஆனால் தற்போது நீண்ட காலத்துக்கு பின் ரூ.5 கோடியை தாண்டி சரக்குகள் விற்பனையாகி உள்ளதாக, அதிகாரிகள் கூறினர்.

இதில் அதிகமாக ரம், பிராந்தி வகைகள் தான் சென்றுள்ளன. பீர் விற்பனை மந்தமாகவே இருந்ததாகவும் டாஸ்மாக் பணியாளர்கள் கூறினர்.  நேற்று 2 வது நாள் காலை 10 மணிக்கு கடைகள் திறந்ததும், ஒரு சில இடங்களில் மட்டுமே கூட்டம் இருந்தது. நேரம் செல்ல, செல்ல கூட்டம் குறைவாக இருந்தன. மாலை 3 மணிக்கு பிறகு சில கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. நாகர்கோவிலில் மழை பெய்ததால், குடைகள் பிடித்தவாறு மது வகைகளை வாங்கி சென்றனர். ஆனால் முதல் நாளை விட விற்பனை  உயர வாய்ப்பு இல்லை என்று டாஸ்மாக் பணியாளர்கள் கூறினர்.

Tags : district ,Kumari ,slowdown , Alcohol sales , Kumari district ,over R5.30 crores, 2nd day ,slowdown
× RELATED குமரி மாவட்டத்தில் பெய்து வரும்...