×

கொரோனாவால் சுனாமி போல் பரவி வருகிறது வெறுப்புணர்வு: ஐநா பொதுச் செயலாளர் கவலை

ஐக்கிய நாடுகள்: கொரோனா தொற்று நோயால் வெறுப்புணர்வும், இனவெறியும் சுனாமி போல் பரவி வருவதாக கவலை தெரிவித்துள்ள ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ கட்டரெஸ், உலகளவில் வெறுப்புணர்வை முடிவுக்கு கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வலியுறுத்தி உள்ளார். ஐநா பொதுச் செயலாளர் கட்டரெஸ் நேற்றைய தனது பேட்டியில் கூறியிருப்பதாவது: நாம் யார், எங்கு வாழ்கிறோம், எதை நம்புகிறோம், நமது பிற நன்னடத்தைகள் என்ன என்பதைப் பற்றியெல்லாம் கோவிட்-19 கவலைப்படுவதில்லை. இது யாரை வேண்டுமானாலும் பாதிக்கும் ஓர் தொற்று நோய். இதை எதிர்த்து நாம் ஒன்றிணைந்து போராட நம்மிடம் ஒற்றுமை தேவை. ஆயினும், இந்த வைரஸ் இனவெறி, வெறுப்புணர்வு பேச்சுக்களை கட்டவிழ்த்து விட செய்துள்ளது.

உலகம் முழுவதும் இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், அந்நிய நாட்டினருக்கு எதிரான உணர்வு ஆன்லைனிலும், தெருக்களிலும் அதிகரித்துள்ளது. புலம்பெயர்ந்தோர், அகதிகள் வைரசின் ஆதாரமாக இழிவுபடுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு சிகிச்சையும் மறுக்கப்படுகிறது. யூத விரோத சதி கோட்பாடுகளும், முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. வயதானவர்களுக்கு எதிரான வெறுக்கத்தக்க மீம்ஸ்கள் சமூக ஊடகங்கள் வெளியிடுகின்றன. உலகம் தொற்றுநோயை எதிர்த்து போராடுகையில், இதுபோன்ற வெறுப்புணர்வையும், இனவெறியையும் தோற்கடித்து மக்களை காக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. எனவே, வெறுப்பு வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அனைத்து நாடுகளும் செயல்பட தொடங்க வேண்டும்.

அரசியல் தலைவர்கள் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களிடம் ஒற்றுமையை காட்டவும், சமூக ஒற்றுமையை வலுப்படுத்தவும் முன்வர வேண்டும். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, லட்சக்கணக்கான இளைஞர்களை ஆன்லைனில் தீவிரவாதத்திற்கு இரையாக்க சதி நடப்பதை தடுத்து, டிஜிட்டல் கல்வியறிவில் கவனம் செலுத்த வேண்டும். எல்லா இடங்களிலும், எல்லோரிடமும் வெறுப்புக்கு எதிராக, கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். சர்வதேச மனித உரிமை சட்டத்தின் படி, இனவெறியைத் தூண்டும் தவறான கருத்துகள், தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை கொண்ட பதிவுகைள சமூக ஊடகங்கள் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தி உள்ளார்.

Tags : Secretary-General ,tsunami ,UN ,Corona , Corona, Tsunami, UN Secretary General
× RELATED அடிக்கடி உரிமையாளரை மாற்றும்...