×

இந்தியாவில் தொடர்ந்து 2வது நாளாக ஒரே நாளில் 3,390 பேருக்கு பாதிப்பு : கொரோனா பாதிப்பு 56 ஆயிரத்தை கடந்தது: மொத்த பலி எண்ணிக்கை 1,886

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 52,952ல் இருந்து 56,342  ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, மொத்த பலியானோர் எண்ணிக்கை 1,783ல் இருந்து 1,886 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 3,390 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 103 பேர் பலியாகி உள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு 45 நாட்கள் முடிவடைந்த நிலையிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனாவின் தாக்கம் தினமும் அதிகரித்தபடியே இருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டினர் 111 பேர் உள்பட 37,916 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம் 16,539 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இதனிடையே, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தாக ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்துவது தொடர்பான ஆய்வுகள் நேற்று முன்தினம் தொடங்கியதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:நாட்டில் கொரோனா தாக்கத்தினால் நேற்று ஒரே நாளில் 103பேர் இறந்துள்ளனர். மகாராஷ்டிராவில் 43, குஜராத்தில் 29, மத்தியப் பிரதேசத்தில் 8, மேற்கு வங்கத்தில் 7, ராஜஸ்தானில் 5, தமிழ்நாடு, உத்தர பிரதேசம், ஆந்திராவில் தலா 2, டெல்லி, பீகார், கர்நாடகா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீரில் தலா ஒருவரும் பலியாகி உள்ளனர்.

மகாராஷ்டிராவில் இதுவரை அதிகபட்சமாக 694 பேரும், அடுத்தபடியாக குஜராத்தில் 425 பேரும் பலியாகி உள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 193, மேற்கு வங்கத்தில் 151, ராஜஸ்தானில் 97 பேரும் இறந்துள்ளனர். நேற்றைய நிலவரப்படி நாடு முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 1,886ஆக இருந்தது. இதே போல மகாராஷ்டிராவில் 17,974 பேர் இதுவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, குஜராத்தில் 7,012 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 5,980, தமிழ்நாட்டில் 5,409, ராஜஸ்தானில் 3,427,  மத்தியப் பிரதேசத்தில் 3,252, உத்தரப் பிரதேசத்தில் 3,071 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 342ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : India ,Corona , India, Corona, curfew, death
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!