×

தொழிலாளர்கள் ஓய்வுக்கூடத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் டீ, காபி, டிபன் கேட்டு திடீர் தர்ணா

திருப்போரூர்: முறையாக உணவு வழங்கவில்லை என கூறி, கொரோனாவல் தனிமைப்படுத்தப்பட்ட காய்கறி வியாபாரிகள் திடீர் போராட்டம் நடத்தினர். சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து, கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வாங்க சென்றவர்களை கண்டறிந்து, அதில் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. அதில், முதல்கட்டமாக வண்டலூர், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, பவுஞ்சூர், லத்தூர் உள்பட செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 200 காய்கறி வியாபாரிகளை கண்டறிந்து, அவர்கள் அனைவரும் சென்னை புறநகர் பகுதியான கேளம்பாக்கம் அருகே தையூரில் கட்டப்பட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் ஓய்வுக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

ஆனால், நேற்று முன்தினம் இரவு அவர்களுக்கு, உணவு வழங்கவில்லை என கூறப்படுகிறது. அதேபோல், நேற்று காலை பல் துலக்க பேஸ்ட், பிரஷ், காபி, டீ வழங்கவில்லை என கூறி, அவர்கள் தங்கியிருந்த கட்டிடத்தை விட்டு வெளியே வந்தனர். பின்னர் உள்பக்க சாலையில் அமர்ந்து அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.  இதையடுத்து அவர்களுக்கு பேஸ்ட், பிரஷ், காபி வழங்கப்பட்டு, காலை டிபன் கொண்டு வரப்பட்டது. ஆனால், அதனை கொண்டு வந்த விதம் சரியில்லை, குப்பைத் தொட்டியுடன் வைத்து கொண்டு வந்தனர் என்றும், எங்களை ஏன் சிறைகைதிகள் போல் அடைத்து வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டு அங்கிருந்த விஏஓக்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து, திருப்போரூர் வட்டாட்சியர் செந்தில்குமார், கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் ஆகியோர் அங்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, கொரோனா பரிசோதனைக்கு ஒத்துழைக்கும்படியும், பரிசோதனை முடிவு வந்தவுடன் அனைவரும் வீடு திரும்பலாம் என்றும் உறுதியளித்தனர். இதையடுத்து அவர்களுக்கு பரிசோதனை நடந்தது.



Tags : restroom , Workers' Retirement Home, Corona, Tea, Coffee, Tibbon
× RELATED பக்தர்களின் வசதிக்காக திருப்பதியில்...