×

மதுக்கடைகள் திறப்புக்கு எதிரான போராட்டம் வலுக்கிறது டாஸ்மாக்கை மூடக்கோரி அமைச்சரை பெண்கள் முற்றுகை: மதுரையில் போலீசார் தடியடி

சென்னை: திருச்சியில், அமைச்சர் வளர்மதி நிவாரணம் வழங்கியபோது, டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என்றுகூறி பொதுமக்கள் முற்றுகையிட்டனர். மதுரையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.  ஊடரங்கு அமலில் உள்ள நிலையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிராக தமிழகம் முழுவதும் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 2வது நாளாக நேற்றும் நடந்த இந்த போராட்டம் பல இடங்களில் தீவிரம் அடைந்தது.  திருச்சி திருவானைக்காவல் அழகிரிபுரத்தில் கொரோனா நிவாரணம் வழங்குவதற்காக அமைச்சர் வளர்மதி நேற்று காலை சென்றார். இதில் அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை 10 பேருக்கு வழங்கி கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 50 பெண்கள் ஒன்று திரண்டு, ‘ எங்களுக்கு நிவாரணம் வேண்டாம்.

இந்த பகுதியில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும். எங்கள் வீட்டில் உள்ளவர்கள் மது வாங்கி குடிப்பதால், அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்கித்தராமல் உள்ளனர்’ என கூறி அமைச்சரை முற்றுகையிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர், கோபத்துடன் புறப்பட்டு சென்றார். மக்கள் குறைதீர்க்காத அமைச்சரை கண்டித்து டாஸ்மாக் கடையை திடீர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ரங்கம் போலீசார், அமைச்சர் கொடுத்த அரிசி மற்றும் ரேசன் கடையில் கொடுக்கும் அரிசியை சமைத்து சாப்பிட வேண்டியது தானே என கூறினர். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் ரேஷன் அரிசியை காட்டி இது தரமானதாக இருக்கிறதா என்று கேள்வி எழுப்பி அரிசியை கீழே கொட்டி போராட்டம் நடத்தினர். 2 டாஸ்மாக் கடைகளையும் ஒரு மாதத்தில் காலி செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்ட பெண்கள் அங்கிருந்து வீடு திரும்பினர்.

அமைச்சர் தொகுதியில் தாக்குதல்-தடியடி: மதுரை, செல்லூர் பகுதியில் அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டின் அருகே உள்ள டாஸ்மாக் கடையை, நேற்று முன்தினம் பெண்கள் முற்றுகையிட்டு போராடினர். போலீசாரால் அவர்களை சமாளிக்க முடியவில்லை. வேறு வழியின்றி கடையின் ஷட்டர் இழுத்து மூடப்பட்டது. இதையடுத்து, செல்லூர் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள மற்றொரு மதுக்கடை முன்பு நேற்று 100 பெண்கள் திரண்டனர். இவர்கள் திடீரென ‘மதுக்கடையை மூடு’ என்பது உள்ளிட்ட கோஷங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், போராட்டக்காரர்கள் கொண்டு வந்திருந்த பூட்டால் கடையை பூட்டினர்.அவர்களுடன் செல்லூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பெண்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பெண் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை வலுக்கட்டாயமாக இழுத்து செல்ல முயன்றனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.உடனே, போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஆண்களில் 30 பேரை மட்டும் கைது செய்து போலீசார் வேனில் ஏற்றிக் கொண்டு சென்றனர்.
திருவாரூரில் டாஸ்மாக் முற்றுகை: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அந்தோணியார் கோவில் பகுதியை சேர்ந்த 60 பெண்கள் நேற்று காலை டாஸ்மாக் கடை முன்பு குவிந்தனர். தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையால் குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாகவும், தங்களின் கணவன்மார்கள் குடித்து விட்டு வந்து ரகளையில் ஈடுபடுவதாகவும் கூறி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே வடசேரி ஊராட்சி காவல்காரன்பட்டி மதுக்கடையை மூடவேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் நேற்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தோகைமலை போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பின், இந்த போராட்டம் மதியம் 2 மணிக்கு முடிவுக்கு வந்தது. நெல்லை மாவட்டம் அம்பை - பாபநாசம் பிரதான சாலையிலும் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வரை  டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என போலீசாரிடம் தெரிவித்தனர். இதனால் நேற்று முழுவதும் டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை. இதேபோல், டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி தேனி, திண்டுக்கல், சிவகங்கை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெண்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குவார்ட்டரு... குடை வேணுமா அதிகாரிகள் மாறி, மாறி உத்தரவு
திண்டுக்கல்லில் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக எஸ்பி சக்திவேல், மது வாங்க வரும்போது குடை கொண்டு வரவேண்டும் என உத்தரவிட்டிருந்தார். நேற்று காலை திண்டுக்கல், சத்திரம் தெருவில் உள்ள மதுபான கடைக்கு வந்த ஒரு சில நபர்கள் குடையுடன் வந்து வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி சென்றனர். பலர் குடை கொண்டு வராமல் மதுபானம் வாங்க கடைக்கு வந்து வரிசையில் நின்றனர். அவர்களை திண்டுக்கல் நகர் டிஎஸ்பி மணிமாறன், விரட்டியடித்தார். இதனால் கடையில் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

அப்போது அந்த வழியாக மதுவிலக்கு டிஎஸ்பி பொன்னுசாமி வந்தார். கடையில் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி இருப்பதை கண்ட அவர், ‘‘குடை கொண்டு வராதவர்களையும் அனுமதிக்க போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்து விட்டு சென்றார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், எந்த உத்தரவை பின்பற்றுவது என தெரியாமல் குழம்பி போய் நின்றிருந்தனர்.


Tags : opening ,women ,minister ,Madurai , Brewery, Struggle, Task, Minister, Women Siege, Madurai, Police
× RELATED ‘மேட்ரிமோனியல்’ இணையதளம் மூலம் 7...