அபுதாபியில் இருந்து சென்னைக்கு மருத்துவ உபகரண பார்சலில் 8 லட்சம் சிகரெட் கடத்தல்: விமான நிலையத்தில் சிக்கியது

மீனம்பாக்கம்: அபுதாபியில் இருந்து சென்னைக்கு மருத்துவ உபகரண பார்சலில் கடத்தப்பட்ட ரூ.8 லட்சம் மதிப்புள்ள சிகரெட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வளைகுடா நாட்டில் இருந்து நேற்று முன்தினம் இரவு சரக்கு விமானம் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில், மருத்துவ உபகரணங்கள் அதிகளவில் வந்திருந்தன. இவை, கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கான உபகரணங்கள் என்பதால், சுங்க சோதனையை விரைந்து முடித்து டெலிவரி கொடுக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.  அதன்படி, சுங்க அதிகாரிகள் மருத்துவ உபகரணங்கள் வந்த பார்சல்களை விரைவாக ஆய்வு செய்தனர். அப்போது, அபுதாபியிலிருந்து தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு முகவரிக்கு மருத்துவ உபகரணங்கள் என்ற பெயரில் 6 பார்சல்கள் வந்திருந்தன.

சந்தேகத்தின் பேரில், அந்த பார்சல்களை பிரித்து பார்த்தபோது, அவற்றில் 63 பண்டல்களில் விலை உயர்ந்த வெளிநாட்டு சிகரெட்கள் இருந்தன. அதன் மதிப்பு சுமார் ரூ.8 லட்சம். இதையடுத்து சுங்கத்துறையினர் அந்த சிகரெட்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அதில் குறிப்பிட்டு இருந்த முகவரி போலியானது என தெரியவந்தது. இதுபற்றி சுங்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.  கடந்த 2 வாரங்களுக்கு முன், அமெரிக்காவிலிருந்து ஆந்திர மாநிலத்திற்கு வந்த ஒரு பார்சலில் கஞ்சா போதைப் பொருள் இருந்ததை கண்டுப்பிடித்து பறிமுதல் செய்தனர். மருத்துவ உபகரணங்கள் என்ற பெயரில் ஆசாமிகள் போதை வஸ்துகளை கடத்திய சம்பவம் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>