×

மகாராஷ்டிராவில் இருந்து சொந்த ஊருக்கு சென்றபோது ரயில் மோதி 16 தொழிலாளர்கள் பலி: தண்டவாளத்தில் படுத்து தூங்கியதால் நிகழ்ந்த பெரும் சோகம்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் ஜால்னா மாவட்டத்தில் இருந்து மத்தியப் பிரதேசத்தில் உள்ள சொந்த ஊர்களுக்கு நடந்து சென்றபோது, இரவில் அயர்ச்சி காரணமாக ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய அப்பாவித் தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதியது. இந்த கோர விபத்தில் 16 பேர் பலியானார்கள். 4 பேர் படுகாயமடைந்தனர்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக மும்பை, புனே உட்பட மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் வேலையிழந்து வருமானமின்றி தவித்து வருகின்றனர். இதனால், எப்படியாவது சொந்த ஊர்களுக்கு சென்று விடுவது என்ற தீவிரத்தில் அவர்கள் உள்ளனர். பலர் லாரி, டெம்போக்களில் பதுங்கியும் வேறு பலர் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சொந்த ஊர்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

இவ்வாறு ரயில் பாதை மற்றும் நெடுஞ்சாலைகள் வழியாக நடந்து சென்றவர்கள் பலர் பசி, தாகம், உடல் அயர்ச்சி காரணமாக உயிரிழந்த பரிதாபங்களும் நிகழ்ந்துள்ளன.
இந்த நிலையில், மகாராஷ்டிராவில் இருந்து மத்தியப் பிரதேசத்தில் உள்ள சொந்த ஊர்களுக்கு நடந்து சென்ற 16 தொழிலாளர்கள் தண்டவாளத்தில் படுத்து தூங்கியபோது சரக்கு ரயில் மோதி உயிரிழந்த பரிதாப சம்பவம் அவுரங்காபாத்தில் நேற்று நடந்தது. மகாராஷ்டிராவின் ஜால்னா மாவட்டத்தில் உள்ள ஒரு ஸ்டீல்
தொழிற்சாலையில் வேலை செய்து வந்த மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு ஊரடங்கு காரணமாக வேலை பறிபோனதாலும், சரியான சாப்பாடு கிடைக்காததாலும் அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்ல முடிவெடுத்தனர்.

நேற்று முன்தினம் காலை இவர்கள் ஜால்னாவில் இருந்து மத்தியப் பிரதேசத்துக்கு செல்லும் வழியில் உள்ள புசாவல் நோக்கி ரயில் தண்டவாளம் வழியாக தங்களது பயணத்தை தொடங்கினர். அவர்கள் 40 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள கர்மாட் என்ற இடத்தை நேற்று முன்தினம் இரவு வந்து சேர்ந்தனர்.
நீண்டதூரம் நடந்து வந்ததால் ஏற்பட்ட களைப்பு காரணமாகவும் இருட்டி விட்டிருந்ததாலும் அவர்கள் அங்கு ஓய்வெடுக்க முடிவு செய்தனர். ஊரடங்கு காரணமாக ரயில்கள் இயக்கப்படுவதில்லை என நினைத்த அந்த அப்பாவித் தொழிலாளர்கள் கர்மாட் அருகே ரயில் தண்டவாளத்திலேயே ஆங்காங்கே படுத்து தூங்கினர். நேற்று அதிகாலை 5 மணியளவில் தொழிலாளர்கள் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த சரக்கு ரயில் தொழிலாளர்கள் மீது ஏறியது.

ரயில் சக்கரம் ஏறியதால் அலறிய ஒரு தொழிலாளியின் சத்தம் கேட்டு சுதாரிப்பதற்குள் மற்ற தொழிலாளர்கள் மீதும் ரயில் பெட்டிகளின் இரும்பு சக்கரம் ஏறியது. இதில் 16 தொழிலாளர்கள் உடல் சிதைந்தும், உடல் துண்டாகியும் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அங்கிருந்து சற்று தொலைவில் படுத்திருந்த 4 தொழிலாளர்கள் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.  இதுபற்றி கர்மாட் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததும் அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதற்குள் அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் அங்கு பெருமளவில் கூடிவிட்டிருந்தனர்.

சாலையில் சென்றால் பிடிப்பார்கள் என்பதால்தண்டவாளம் வழியாக சென்ற அப்பாவிகள்
விபத்து நடந்த இடத்தில் பல அடி தூரம் வரை தண்டவாளத்தில் சிதைந்த உடல் பாகங்கள் ரத்தக்கறைகளுடன் காணப்பட்டது கோரமாக இருந்தது. உயிரிழந்த 16 பேரின் உடல் பாகங்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கர்மாட் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி சந்தோஷ் கெட்மலாஸ் கூறுகையில், ‘‘காயமடைந்த 4 தொழிலாளர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நெடுஞ்சாலை வழியாக நடந்து செல்லும்போது போலீசாரிடம் சிக்கிக் கொள்ள நேரிடும் என கருதி இந்த தொழிலாளர்கள் ரயில் பாதையில் நடந்து சென்றுள்ளனர். உயிரிழந்த மற்றும் காயமடைந்த தொழிலாளர்கள் அனைவரும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

தலைவர்கள் இரங்கல்: 10 லட்சம் இழப்பீடு
சரக்கு ரயில் மோதி 16 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘‘உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் அரசு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களின்  குடும்பங்களுக்கு மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேச அரசுகள் தலா 5 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளன.

மகாராஷ்டிராவில் சிக்கியிருக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ள உத்தவ் தாக்கரே, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



Tags : train crashes ,home ,Maharashtra ,hometown , Train collision in Maharashtra, 16 workers killed
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு