×

ஊரடங்கு விதிகளை மீறி கூட்டம் கூட்டமாக குவிந்ததால் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு: ஆன்லைன் மூலம் மட்டுமே விற்க அனுமதி: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: தமிழகம் முழுவதும் ஊரடங்கு விதிமுறைகளை மீறி, டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக குவிந்ததால் ஊரடங்கு முடியும்வரை டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் நேற்று அதிரடியாக உத்தரவிட்டது. அதேநேரத்தில், ஆன்aலைன் மூலம் மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. தமிழகத்தில் கடந்த 44 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் ஓரளவு ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் பாதிப்பு அதிகமாக இருப்பதால், ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கும் என்று அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் சென்னையை  தவிர மாவட்டங்களில் டாஸ்மாக் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. இதனால் மாநிலம் முழுவதும் குடிமகன்கள், காலையிலேயே டாஸ்மாக் கடைகள் முன்பு குவிந்தனர். பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டு மதுவை வாங்கிச் சென்றனர்.

ஊரடங்கு காரணமாக, வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமணம் மற்றும் மரணத்தில் 20 பேர்தான் கலந்துகொள்ள வேண்டும். வெளிமாவட்டம் செல்ல வேண்டும் என்றால் பாஸ் வாங்க வேண்டும். அத்தியாவசியப் பணிகள் செய்பவர்களை தவிர மற்றவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அரசு கூறியிருந்தது. ஆனால், மது வாங்க கூட்டம் கூட்டமாக திரண்டிருந்தனர். இதனால் கொரோனா நோய் பரவும் ஆபத்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அனைத்து அரசியல் கட்சிகளும் டாஸ்மாக் கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தினர். தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 13 பேர் மதுவால் கொலை செய்யப்பட்டனர். பெண்கள் பல இடங்களில் போராட்டங்களையும் நடத்தினர்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் ஜி.ராஜேஷ் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:  தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் டாஸ்மாக் கடைகளை அரசு திறந்துள்ளது. சென்னை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் 7ம் தேதி முதல் மது விற்பனை தொடங்கியுள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு இடங்களில் மதுக்கடைகளை மூடுமாறு பெண்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். டாஸ்மாக் கடைகளில் கட்டுக்கடங்காத வகையில் மது வாங்க வருபவர்களின் கூட்டம் உள்ளது. எந்த கடையிலும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை. இதனால், கொரோனா வைரஸ் அதிகமாக பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. டெல்லி போன்ற இடங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று தமிழகத்திலும் ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்யுமாறு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இதேபோல், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் அதன் மூத்த நிர்வாகியான ஓய்வு பெற்ற ஐஜி மவுரியாவும் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் இந்த நேரத்தில் மதுக்கடைகளை திறப்பது நோய் தொற்றை பல மடங்காக்கிவிடும். மது வாங்க வருபவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு கூறும் காரணங்கள் ஏற்க கூடியதாக இல்லை. வெளியூருக்கு செல்பவர்கள் பாஸ் வாங்கி செல்ல வேண்டும் என்று கூறும் அரசு, அண்டை மாநிலங்களுக்கு மது வாங்க செல்கிறார்கள் என்று கூறுவது முரண்பாடாக உள்ளது. எனவே, டாஸ்மாக் கடைகளை திறக்கும் அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்திய நாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மவுரியா சார்பில் மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ராஜேஷ் சார்பில் வக்கீல் கவிதா ஆகியோர் ஆஜராகி, டாஸ்மாக் கடைகளில் குடிமகன்களின் கூட்டம் தொடர்பான புகைப்படங்களையும், செய்திகளையும் தாக்கல் செய்தனர். அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ஒரு சில இடங்கள் தவிர மற்ற இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு: உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியாக அமல்படுத்தப்படவில்லை. விதிமுறைகளும் கடைபிடிக்கப்படவில்லை. எனவே, ஊரடங்கு முடியும்வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்.

அரசு விரும்பினால் ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்யலாம். அதன் மூலம் வீடுகளுக்கு மது பாட்டில்களை டெலிவரி செய்யலாம். வழக்கு வரும் 14ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 நாட்களாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்படாது என்று கூறப்படுகிறது.

ஆன்லைன் விற்பனை உடனடியாக சாத்தியமா?
தமிழகத்தில் உடனடியாக ஆன்லைனில் விற்பனை செய்ய வசதிகள் இல்லை. மேலும், மதுபானங்களை கிராமங்களுக்கு கொண்டு செல்வதற்கு ஆட்கள் இல்லை. வீடுகளுக்குச் சென்று விநியோகம் செய்தால், பெண்கள், குழந்தைகள் இருப்பார்கள். இதனால் தேவையில்லாமல் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும். மதுபானங்களை கொண்டு செல்பவர்கள் தாக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன.

உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு
தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. அந்த மனுவில், ‘‘மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியே டாஸ்மாக் திறக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை மாநில அரசும், காவல் துறை அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர். அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட அதிகாரமில்லை என்பதால், உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் டாஸ்மாக்கை தடை செய்வதால் அண்டை மாநில எல்லையால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும். அதனை கட்டுப்படுத்தவே அரசு டாஸ்மாக்கை பாதுகாப்போடு திறந்துள்ளது’’ என்று தெரிவிக்க உள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : Closing ,shops ,Tasmac ,Madras High Court , Curfew, Corona, Task Shop, Madras High Court
× RELATED 4 பீர் வகைகளுடன் குறைந்த விலையில்...