×

கொரோனா விவகாரத்தில் தமிழகம் உட்பட 5 மாநிலங்கள் மீது அதிருப்தி: பொறுப்பை மாநிலங்களின் தலையில் மோடி கட்டுவது ஏன்?

* 3ம் கட்ட ஊரடங்கு அறிவிப்பில் பின்வாங்கிய பகீர் பின்னணி
* 45 நாட்கள் முடிந்தும் நிலைமை மோசமாவதால் திடீர் குழப்பம்

புதுடெல்லி: கொரோனா விவகாரத்தில் தமிழகம் உட்பட 5 மாநிலங்கள் மீது பிரதமர் மோடி கடும் அதிருப்தியில் உள்ளார். மாநிலங்களுடன் பொறுப்பை மோடி பகிர்வது ஏன்?, 3ம் கட்ட ஊரடங்கு அறிவிப்பில் பின்வாங்கிய பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. 45 நாட்கள் ஊரடங்கு முடிந்தும் நிலைமை மோசமாவதால் திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வருகிற ஜூன், ஜூலை மாதங்களில் பாதிப்புகள் உச்சக்கட்டத்தை எட்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் கொரோனா பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், டெல்லி, குஜராத், தமிழகத்தில் நிலைமே நாளுக்கு நாள் கவலையளிக்கும் வகையில் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதேபோல் இறப்பு நிகழ்வுகளும் அதிகரித்துள்ளன.

மேற்கண்ட மாநிலங்களில் நோயாளிகளின் தொடர்பு தடமறிதல் மற்றும் பரிசோதனைக்கு குறிப்பிட்ட உத்தி எதுவும் கடைபிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குஜராத், டெல்லி, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு இரண்டாவது அலையில் உள்ளதாகவும், அது மிகவும் ஆபத்தானது என்றும் சுகாதாரத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், நாட்டில் கொரோனாவின் இறப்பு விகிதத்தின் புள்ளிவிபரங்களில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஏப். 25 முதல் மே 5 வரை, நாட்டில் கொரோனா காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை பத்து லட்சம் பேருக்கு 1.31 பேர் என்ற நிலையில் இருந்தது. அதே நேரத்தில், இப்போது இந்த எண்ணிக்கை மகாராஷ்டிரா மற்றும் குஜராத் இரண்டிலும் 5-ஐ தாண்டியுள்ளது.

இந்த இரண்டு மாநிலங்களும் தீவிர கண்காணிப்பு, தொடர்புத் தடமறிதல் மற்றும் கொரோனா பாசிடிவ் நபர்களை தனிமைப்படுத்தல் போன்றவற்றில் அலட்சியமாக இருக்கின்றன. டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா, ஜூன்-ஜூலை மாதங்களில் கொரோனா உச்சத்தில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இது மிகவும் பயமுறுத்துவதாக இருக்கலாம். கொரோனா அதன் வேகத்தை அதிகரித்தது மட்டுமல்லாமல், அதன் நிறத்தையும் மாற்றிவிட்டது. அதாவது கொரோனாவின் அறிகுறிகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில், இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் மட்டுமே கொரோனாவின் அறிகுறிகளாகக் கருதப்பட்டன. ஆனால் இப்போது இன்னும் பல அறிகுறிகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. அதாவது நடுக்கம், குளிர், உடல் வலி, தொண்டை வலி, தலைவலி, வாசனை திரவியத்தின் வாசனை மற்றும் உணவின் சுவை இழப்பு ஆகியவை கொரோனாவின் அறிகுறிகளில் சேர்க்கப்பட்டுள்ளன.

பூண்டு போன்ற உணவு மற்றும் பானத்தின் வாசனை தெரியாமல் இருப்பது கொரோனாவின் அறிகுறிகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் அது திடீரென்று இருக்க வேண்டும். இருப்பினும், கடந்த 45 நாட்களாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் உள்ளனர். இருந்தும், கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. நிலைமை இவ்வாறு இருக்க, பிரதமர் மோடி கொரோனா பரவலை தடுக்க பல திடீர் முயற்சிகள் மற்றும் அறிவிப்புகளை செய்திருந்தாலும், 45 நாட்கள் ஊரடங்கு முடிந்தும் கூட மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், டெல்லி, குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் நிலைமையை கண்டு அவர், அதிருப்தி அடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா விவகாரம் தொடர்பாக மார்ச் 19ம் தேதி முதல் தொலைக்காட்சி அல்லது வானொலியில் ஒன்பது சந்தர்ப்பங்களில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

வீடுகளில் விளக்கேற்றுதல், ஊரடங்கு போன்றவற்றை அறிவித்தார். ஆனால், மே 3ம் தேதிக்கு பிந்தைய 3ம் கட்ட ஊரடங்கை பிரதமர் மோடி அறிவிக்கவில்லை. அவருக்கு பதிலாக மத்திய உள்துறை செயலாளரால் கையெழுத்திடப்பட்ட உத்தரவாக செய்தி நிறுவனங்கள் மூலம் மீண்டும் 15 நாட்களுக்கான ஊரடங்கு நீட்டிப்பு அறிவிக்கப்பட்டது. மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கை தயக்கமின்றி அறிவித்த மோடி, 2வது ஊரடங்கையும் நீடித்துவிட்டு, 3வது ஊரடங்கை மட்டும் அறிவிக்காமல் பின்வாங்கியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏப். 14ம் தேதி முதல் ஊரடங்கு முடிவடைந்த போது, மாநிலங்களுடன் பொறுப்பை பகிர்ந்து கொண்டார். ஊரடங்கை விரிவாக்குவதற்கான அடிப்படை பிரச்னை குறித்து மாநில முதல்வர்களின் கருத்தை கேட்டறிந்தார். சில முதலமைச்சர்கள் ஊரடங்கை நீட்டிக்க ஆதரவு கோரியதால், அவர்களின் ஆதரவோடு பிரதமர் மோடி தொலைக்காட்சியின் வாயிலாக 2வது ஊரடங்கை அறிவித்தார்.

மே 3ம் தேதியை  நெருங்கியபோது, ​​பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்த நிலையில், சில மாநில முதல்வர்கள் மீண்டும் ஊரடங்கு நீடிப்பு கோரிக்ைகயை முன்வைத்தனர். ஆனால், பிரதமர் மோடி வழக்கம் போல் 3வது ஊரடங்கு நீட்டிப்பை அறிவிக்கவில்லை. இதற்கெல்லாம் காரணம், ஊரடங்கு அறிவிப்புக்கு முந்தைய ஏற்பாட்டில் குளறுபடி, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்னை மற்றும் அவர்களிடம் ரயில் கட்டணம் வசூலித்தல் விவகாரம், பல மாநிலங்களில் போலீஸ் - மக்கள் மோதல், மாநிலங்களின் நிதி நெருக்கடியால் மதுக்கடைகள் திறப்பு கோரிக்கை, சில மாநிலங்கள் நோயாளிகளின் தொடர்பு தடமறிதல் மற்றும் தீவிர கண்காணிப்பு இல்லாததால் தொற்று தீவிரமாக பரவல் போன்ற பல நெருக்கடிகளால் பிரதமர் மோடி கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

இருந்தும், கொரோனா ஊரடங்கு விவகாரத்தில் மத்திய அரசுக்கு முழு கெட்டப் பெயரும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, மாநிலங்களுடன் அதிகார பொறுப்பைப் பகிர்ந்து கொள்ள பிரதமர் மோடி ஆர்வமாக உள்ளார். மக்களின் உணர்வுகள் தனது அரசாங்கத்திற்கு எதிராக மாறாமல் இருக்க, மாநிலங்களுடனான பகிர்வு, ஆலோசனைகள் பெறப்படுவதாக கூறப்படுகிறது. இருந்தும், பல மாநிலங்கள் கொரோனா பாதிப்பை சரியாக கையாளாததால், ஊரடங்கு முடிவுக்கு பிந்தைய நடவடிக்கைகளில் மோடி கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வேகமெடுக்கும் கொரோனா இறப்பு  
நாடு முழுவதும் ஜன. 30 முதல் மார்ச் 31ம் தேதி வரை 62 நாட்களில் கொரோனா பாதிப்பால், 50 பேர் மட்டுமே இறந்தனர். ஏப். 1 முதல் ஏப். 12ம் தேதி வரை 12 நாட்களில் 266 பேர் இறந்தனர். அதேநேரத்தில், ஏப். 13 முதல் 22ம் தேதி வரை கொரோனா காரணமாக 10 நாட்களில் 324 பேர் உயிர் இழந்தனர். ஏப். 23 முதல் ஏப். 30 வரை வெறும் 6 நாட்களில் 513 பேர் உயிர் இழந்தனர். அதே நேரத்தில், மே 1 முதல் 7 வரை 7 நாட்களில் 666 பேர் இறந்தனர். கொரோனாவால் முதல் மரணம் மார்ச் 11ம் தேதி நடந்தது. மார்ச் 31ம் தேதி வரை இறப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் மார்ச் 31ம் தேதிக்குப் பிறகு நிலைமை மோசமடைந்தது.

Tags : states ,Corona ,Modi ,Tamil Nadu , Corona, Tamil Nadu, dissatisfaction, Modi
× RELATED மரம் வளர்ப்போம்! பறவைகளை காப்போம்!...