×

மரக்காணம் அருகே மீனவர் கிராமத்தில் திடீர் சூறாவளி ரூ5 லட்சம் பைபர் படகுகள் சேதம்: அதிகாரிகள் விசாரணை

மரக்காணம்: மரக்காணம் அருகே மீனவர் கிராமத்தில் ஏற்பட்ட திடீர் சூறாவளி காற்றில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான பைபர் படகுகள் சேதமடைந்தன. இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ளது பனிச்சமேடு மீனவர் கிராமம். இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் கடந்த 40 நாட்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் கடற்கரையோரம் தங்கள் பைபர் படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர். தற்போது கோடை காலம் என்பதால் இப்பகுதியில் உள்ள பெரும்பாலான மீனவர்கள் கடற்கரையோரம் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் திடீரென சூறாவளி காற்று வீசியுள்ளது. இந்த சூறாவளியால் அச்சம் அடைந்த மீனவர்கள் அங்கிருந்து தங்கள் வீடுகளுக்கு ஓடிவிட்டனர். சூறாவளியுடன் மணல் புயலும் வீசியதால் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர் படகுகள், வலைகள், இன்ஜின்களை காற்று புரட்டிப்போட்டது. இதில், அதே பகுதியை சேர்ந்த காளப்பன், பூபாலன், ராஜேஷ் ஆகியோரின் 3 படகுகள் மற்றும் இன்ஜின்கள் கடுமையாக சேதமடைந்தது. மேலும் 50க்கும் மேற்பட்ட படகுகள் சிறிய அளவிலான பாதிப்பை சந்தித்தன. இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக மரக்காணம் மீன்வளத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து சூறாவளி காற்றால் படகுகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தனர். இந்த சூறாவளியால் பனிச்சமேடு மீனவர் பகுதியில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான படகுகள், வலைகள், இன்ஜின்கள் சேதமடைந்துள்ளதாக அப்பகுதி மீன்வர்கள் தெரிவித்தனர்.

Tags : Cyclone Fisherman's Village ,Fisherman's Village ,Marakkam Woodpecker , Woodpecker, Fisherman's Village, Hurricane, Piper Boats, Damage
× RELATED தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக...