×

தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி; இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி....டாஸ்மாக் குறித்து நடிகர் கமல்ஹாசன் ட்விட்

சென்னை: டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து கமல்ஹாசன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும், சத்தியமே வெல்லும் என்றும் நிரூபித்திருக்கிறது இந்த தீர்ப்பு என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நேற்று முதல் சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நோய்த்தடுப்புப் பகுதிகள் அல்லாத மற்ற பகுதிகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் நேற்று நிபந்தனைகளுடன் திறக்கப்பட்டன. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பெண்களும், பொதுமக்களும் ஆங்காங்கே இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

 மேலும், பல இடங்களில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் மதுப்பிரியர்கள் மது வாங்கிச் சென்ற சம்பவங்களும் நடைபெற்றன. இந்நிலையில், இன்று தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்புக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சிறப்பு வழக்கைத் தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணையின் போது, மதுக்கடைகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை என நீதிபதியின் முன்பு வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதையடுத்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பொது முடக்கம் முடியும் வரை டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது; நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும், சத்தியமே வெல்லும் என்றும் நிரூபித்திருக்கிறது இந்த தீர்ப்பு. மக்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது. மக்கள் நீதி மய்யம் மட்டும் பெற்ற வெற்றி அல்ல இது. எம் எண்ணம் வென்றது என தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி. இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் வெல்லும் தமிழகம் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu ,celebration ,mothers ,Kamal Haasan Dwight on Task ,Tamil ,Kamal Hassan , Success, Tasmak, Actor Kamal Haasan
× RELATED திமுக முன்னாள் எம்எல்ஏ குழந்தை தமிழரசன் காலமானார்