×

ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டில் வெளிமாநில வியாபாரிகள் வராததால் 12 லட்சம் மூட்டைகள் தேக்கம்: விவசாயிகள் கவலை

ஈரோடு: கொரோனா ஊரடங்கல் ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டிற்கு வெளிமாநில, மாவட்ட வியாபாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், 12 லட்சம் மஞ்சள் மூட்டைகள் மண்டிகளில் தேக்கம் அடைந்துள்ளது.தென்னிந்தியாவின் மிகப்பெரிய மஞ்சள் மார்க்கெட்டாக ஈரோடு மஞ்சள் மார்க்கெட் உள்ளது. இங்கு ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து விளைவிக்கப்படும் மஞ்சளை விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வருகின்றனர். இதற்காக, பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு செம்மாம்பாளையத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபியில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் என 4 இடங்களில் மஞ்சள் ஏலம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு போதிய விலை கிடைக்காவிட்டால் தனியார் மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சொந்தமான மஞ்சள் மண்டிகளில் இருப்பு வைத்து மஞ்சள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த 4 மார்க்கெட்டுகளிலும் தினமும் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் மூட்டைகள் வரை விற்பனை இருக்கும்.

இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மஞ்சள் மார்க்கெட்டிற்கு விடுமுறை விடப்பட்டதால் மண்டிகளில் புதிய மஞ்சள், பழைய மஞ்சள் என 12 லட்சம் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளது. தற்போது, கோபியை தவிர மற்ற 3 பகுதிகளிலும் மஞ்சள் ஏலம் துவங்கி உள்ள நிலையில் குறைந்த அளவிலேயே விவசாயிகள் வருகின்றனர்.வெளிமாநில, மாவட்ட விவசாயிகள், வியாபாரிகள் வராததால் விற்பனையும் மந்த நிலையிலேயே உள்ளது. மேலும், மகாராஷ்டிராவில் உள்ள மஞ்சள் மார்க்கெட்டை விட ஈரோடு மஞ்சள் குவின்டால் 400 முதல் 500 ரூபாய் வரை விலை அதிகமாக உள்ளது. இதனால், மஞ்சள் விற்பனை எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.  

 ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது:கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உள்ளதால் சில கட்டுப்பாடுகளுடன் மஞ்சள் மார்க்கெட்டை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது, மார்க்கெட் செயல்பட்டு வரும் நிலையில் 100 முதல் 160 சேம்பிள் வர துவங்கி உள்ளது. வழக்கமாக, ஏப்ரல், மே மாதங்களில் 400 முதல் 500 சேம்பிள் வரை வரத்து இருக்கும். வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள், விவசாயிகள் வராததால் மந்த நிலையிலேயே உள்ளது.

போக்குவரத்தை சரி செய்து அனைத்து விவசாயிகள், வியாபாரிகள் வந்தால்தான் வழக்கமான மஞ்சள் விற்பனை இருக்கும். மேலும், மகாராஷ்டிராவில் இந்தாண்டு மஞ்சள் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் நிலையை கொண்டே மஞ்சள் விலை உள்ளது. விவசாயிகளை ஊக்குவிக்க மஞ்சளுக்கு கடனுதவி வழங்க வேண்டும். அப்போதுதான் மஞ்சள் விற்பனை வழக்கமான நிலைக்கு மாறும்.இவ்வாறு சத்யமூர்த்தி கூறினர்.



Tags : traders ,Erode Yellow Market , Erode ,Yellow Market, non-existent,farmers concerned
× RELATED நீடாமங்கலத்தில் மேம்பாலப்பணியை...