×

தமிழக அரசு அதிக அளவில் கொரோனா பரிசோதனை செய்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது: அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேச்சு

டெல்லி: தமிழக அரசு அதிக அளவில் கொரோனா பரிசோதனை செய்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பாராட்டு தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸால்  இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56,342 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3390 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 103 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 1886 பேர் உயிரிழந்த நிலையில், 16,540 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் காணொலி மூலம் கொரோனா பாதிப்பு குறித்து அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆலோசனை நடத்தினார். அப்போது மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தங்களது மாநிலங்களில் மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கினர். பின்னர் பேசிய  அமைச்சர் ஹர்ஷ்வர்தன்; தமிழக அரசு அதிக அளவில் கொரோனா பரிசோதனை செய்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவில் தேசிய அளவில் 821 கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனைகள் உள்ளன. அவற்றில் 1,50,059 படுக்கைகள் உள்ளன. 1,898 மருத்துவ மையங்களில் 1,19,109 படுக்கைகள் உள்ளன. 7,569 தனிமைப்படுத்தும் மையங்கள் உள்ளன. 29.06 லட்சம் பாதுகாப்பு உபகரணமான பிபிஇ கிட்டுகள் உள்ளன.

62.77 லட்சம் என்-95 முக உரைகள் உள்ளன. அவை பல்வேறு மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன என கூறினார். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் மூலமான இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது. கொரோனா பாதித்தவர்களில் 3.3 சதவீதம் பேர் மட்டுமே இந்தியாவில் உயிரிழந்துள்ளார்கள். 28.83 சதவீதம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ளனர். தற்போது 35,902 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 4.8 சதவீதம் பேருக்கு ஐசியூவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 1.1 சதவீகதம் பேருக்கு வென்டிலேட்டர் உதவி தேவைப்படுகிறது. 3.3 சதவீதம் பேருக்கு பிராண வாயுவின் உதவி தேவைப்படுகிறது. கடந்த 7 நாட்களில் நாட்டில் உள்ள 180 மாவட்டங்களில் சுவாசத் தொற்று தொடர்பாக ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை.

அதேபோல 180 மாவட்டங்களில் கடந்த 13 நாட்களாக எவ்வித கொரோனா பாதிப்பும் இல்லை. மேலும், 164 மாவட்டங்களில் 14-20 நாட்களாக புதிதாக கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்படவில்லை. கூடுதலாக, 136 மாவட்டங்களில் கடந்த 21 முதல் 28 நாட்களாக ஒரு கொரோனா பாதிப்பும் ஏற்படவில்லை. சத்தீஸ்கர், ஜார்கண்ட், இமாச்சல பிரதேசம், ஜம்மூ காஷ்மீர், கேரளா, மிசோரம், மணிப்பூர், கோவா, மேகாலயா, லடாக், அருணாச்சல பிரதேசம், ஒடிசா, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இதுவரை டாமன் மற்றும் டியூ, சிக்கிம், நாகாலாந்து, இலட்சத்தீவுகளில் ஒரு கொரோனா பாதிப்புக் கூட பதிவாகவில்லை எனவும் கூறினார்.

Tags : Harshvardhan ,government ,Tamil Nadu , Harshvardhan, Minister, Government of Tamil Nadu
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...