×

விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் 11 பேர் உயிரிழந்த சம்பவம் : எல்.ஜி பாலிமர் நிறுவனம் ரூ.50 கோடி வைப்புத் தொகை செலுத்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

ஹைதராபாத் : ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் ஏற்பட்ட விபத்து தொடர்பாக எல்.ஜி பாலிமர் நிறுவனம் ரூ.50 கோடி செலுத்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருக்கும், தென் கொரிய ரசாயன தொழிற்சாலையிலிருந்து,நேற்று அதிகாலை ஸ்டைரீன் என்ற விஷவாயு கசிந்தது.  இந்த விஷவாயு ஆர்.ஆர்.வெங்கடாபுரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியை ஒட்டி, காற்றில் வேகமாகப் பரவியது. சுமார் 3 கிலோ மீட்டர் துாரம் பரவிய இந்த விஷவாயுவால் ஐந்து கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வீடுகளில் துாங்கிக் கொண்டிருந்தவர்கள், மூச்சுத் திணறல், கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் போன்ற உபாதைகளால் பாதிக்கப்பட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஏராளமானோர் மயங்கி விழுந்தனர். 11 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், விஷவாயு கசிவு விபத்து ஏற்பட்ட ரசாயன தொழிற்சாலைக்கு இதுவரை சுற்றுசூழல் துறை அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தடையை மீறி தொழிற்சாலை இயங்கி வந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதி ஆதர்ஷ்குமார் கோயல் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது விஷவாயு கசிவால் ஏற்பட்ட விபத்து தொடர்பாக பதிலளிக்கும்படி மத்திய அரசு, எல்ஜி பாலிமர்ஸ் இந்தியா பிரைவேட், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். அது மட்டுமல்லாது நீதிபதி பி சேஷசயன ரெட்டி தலைமையில் ஐவர் அடங்கிய விசாரணைக் குழு ஒன்றையும் தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்துள்ளது. இந்த குழுவானது விஷவாயு கசிவு விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகிற மே 18ம் தேதிக்கு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. மேலும் எல்.ஜி பாலிமர்ஸ் நிறுவனம் ,விசாகப்பட்டினம் மாவட்ட நீதபதியிடம்  முதற்கட்டமாக 50 கோடி ரூபாய் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


Tags : gas leak ,National Green Tribunal ,company , Visakhapatnam, gas, leakage, LG polymer, corporation, Rs 50 crore, deposit, National Green Tribunal, order
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...