×

திருமழிசைக்கு சந்தையை மாற்றும் சிக்கல்கள் என்ன?: தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் கொரோனாவின் கோர தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அனைவருக்கும் உயிர் பயம் என்ற அதிர்ச்சியை அளித்துள்ளது. சென்னை மக்கள் சொந்த ஊருக்கு படையெடுக்கும் அவலம்   ஏற்பட்டுள்ளது. இப்படி சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதற்கு, கோயம்பேடு மார்க்கெட் தான் காரணம் என்று அனைவரும் குற்றச்சாட்டு கூறும் நிலை தற்போது  ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, கோயம்பேடு சந்தையில் சில வியாபாரிகள், அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் சிலருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பிறகுதான் அதிகாரிகள் திடீரென விழித்துக் கொண்டு, பழம் மற்றும் பூ   மார்க்கெட்டை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க தொடங்கினர். பொதுமக்கள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து, கொரோனா உற்பத்தி சந்தையாக மாறிய கோயம்பேடு மார்க்கெட்டை   மூடுவதாக தமிழக அரசு கடந்த 4-ம் தேதி அறிவித்தது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் சிலருக்கு தொற்று  இருப்பது  கண்டறியப்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடப்படுகிறது.

பொதுமக்களுக்கு காய்கறிகள் தங்கு தடையின்றி கிடைக்கவும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்கள் மக்களை சென்றடையவும் சென்னை திருமழிசையில் வரும் 7ம் தேதி வியாழக்கிழமை முதல் தற்காலிகமாக காய்கறி   மொத்த விற்பனை அங்காடி செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த சிறு வியாபாரிகள் திருமழிசை காய்கறி மொத்த விற்பனை அங்காடிக்கு வந்து   காய்கறிகளை வாங்கிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், திருமழிசையில் சந்தை இன்று வரை தொடங்கவில்லை. கடைகள் அமைக்கும் பணிதான் தொடந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோயம்பேடு சந்தையை திருமழிசைக்கு மாற்றும் நடவடிக்கைகள் குறித்து சென்னை  தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். திருமழிசைக்கு சந்தையை மாற்றும் சிக்கல்கள், எப்போது சந்தை தொடங்கலாம்? தற்போது சந்தை நிலை என்ன? என்பது குறித்து அதிகாரிகளிடம்  முதல்வர் பழனிசாமி கேட்டறிந்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.



Tags : Thirumazillai , What are the issues that are changing the market for Thirumazillai?
× RELATED திருமழிசை சந்தையில் தனி மனித...