×

அரசு போக்குவரத்துக்கு ரூ.1000 கோடிக்கு மேல் இழப்பு: ஊரடங்கு முடிந்தப்பின் பஸ் கட்டணத்தை உயர்த்த அரசு ஆலோசனை என தகவல்

சென்னை: தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து தொடங்கும்போது, பஸ் கட்டணத்தை உயர்த்த அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி  கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு 44 நாட்கள் முடிவடைந்த நிலையிலும்,  நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனாவின் தாக்கம் தினமும் அதிகரித்தபடியே இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதற்கிடையே, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் சென்னை, விழுப்புரம், கோவை, கும்பகோணம், மதுரை, நெல்லை உள்பட 8 கோட்டங்கள் மூலம் 23 ஆயிரத்துக்கும் அதிமான பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு போக்குவரத்து  கழகத்தில் டிரைவர்கள், கண்டக்டர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலர்கள் உள்பட சுமார் ஒரு லட்சத்து 5 ஆயிரம் பேர் பணி செய்து வருகின்றனர். இந்த பஸ்களால் மாதம் 850 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்து வந்தது. இதில்  தொழிலாளர்கள் சம்பளத்திற்கு 450 கோடியும், மீதி தொகை டீசல், உதிரிபாகங்ககள் வாங்குவதற்கான செலவு, டோல்கேட் வரி, சாலைவரி உள்ளிட்ட செலவுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அரசு போக்குவரத்து கழக அனைத்து பஸ்களும் பணிமனைகளில் முடங்கி உள்ளதால், இதுவரை 1000 கோடிக்கு மேல்  வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கான சம்பளம் 450 கோடி தேவைபடுகிறது. வருவாய் இழப்பால் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை சரி செய்ய மத்திய அரசு  போக்குவரத்து கழகத்துக்கு நிதி அளிக்க வேண்டும் என போக்குவரத்து கழக தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இருப்பினும், பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வு, மதுப்பானங்கள் விலை உயர்வு, அரசு ஊழியர் ஓய்வு வயது உயர்வு என பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்த வகையில், ஊரடங்கின் போது, ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய  ஊரடங்கு முடிந்து பஸ் போக்குவரத்து துவங்கும் போது, பஸ் கட்டணத்தை சற்று உயர்த்தவும், அரசு ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பினை அரசு விரைவில் வெளியிடும் என்று தெரிவிக்கப்படுகிறது. 


Tags : Loss ,Government , Government to increase bus fares after curfew Information as advised
× RELATED ஒன்றிய அரசின் 18% ஜிஎஸ்டி, 20%...