×

அமைச்சர் வீடு அருகே திறக்கப்பட்ட மதுக்கடையை இழுத்து மூடிய பெண்கள்: மதுரை செல்லூர் பகுதியில் பரபரப்பு

மதுரை: மதுரையில் மதுவிற்கு எதிராக திடீரென திரண்ட ஏராளமான பெண்கள், அமைச்சர் வீட்டருகே திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு இழுத்து மூடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் 44 நாட்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டன. மதுரை, செல்லூர் பகுதியில் அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டின் அருகே ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையை நேற்று காலை திறந்ததும், இப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், டாஸ்மாக் கடை முன்பு குவிந்தனர். இவர்கள், ‘‘அத்தியாவசிய பொருட்கள் தர வேண்டிய கடைகள் எல்லாம் அடைத்துக் கிடக்கும்போது, ஆண்களை குடிப்பழக்கத்திற்கு ஆளாக்கி எங்கள் குடும்பத்தையே வீதிக்கு வர வைக்கும்  இந்த மதுக்கடையை திறக்கக் கூடாது’’ என கோஷங்களை எழுப்பியபடி, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘‘திறந்து வைத்து மது விற்றால் கடையை அடித்து நொறுக்குவோம்’’ என்றும் அவர்கள் கோஷமிட்டது, பரபரப்பை மேலும் அதிகரிக்கச் செய்தது.
 போலீசார் திரண்டு வந்தும் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை. பெண்கள் போராட்டத்தால் வேறு வழியின்றி, அங்கு திரண்டிருந்த குடிமகன்கள் தெறித்து ஓட, கடையின் ஷட்டர் இழுத்து மூடப்பட்டது. போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கடையை பூட்டாமல்  கலைந்து செல்ல மாட்டோம் என பெண்கள் கூறவே, கடை பூட்டப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
இளைஞர்கள் காலில் விழுந்ததால்  திரும்பி சென்ற முதியவர்கள்: மதுரை மாவட்டத்தில், திருமங்கலத்தை அடுத்துள்ள தோப்பூரில் டாஸ்மாக் கடை காலை 10 மணிக்கு திறக்கப்பட்டது. இந்த கடையில் முதியவர்கள் வரிசையில் நின்று ‘சரக்கு’ வாங்கி சென்றனர்.

திமுகவை சேர்ந்த இளைஞர்கள் வரிசையில் நின்ற முதியவர்கள் கால்களில் விழுந்து, ‘‘குடிக்காதீர்கள்... கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவுகிறது, மது குடித்து கொரோனாவை வீட்டிற்கு அழைக்காதீர்கள்..’’ என அவர்களிடம் வலியுறுத்தினர். இளைஞர்கள் தங்களது கால்களில் விழுந்ததால் அதிர்ச்சியடைந்த முதியவர்களில் சிலர் மன்னிப்பு கேட்டு, அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

அரசு நிவாரண பணத்தில்  கணவருக்கு சரக்கு வாங்க வந்த மூதாட்டி
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் கதிரவன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அந்தியூரில் இருந்து அத்தாணி செல்லும் மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் வரிசையில் நின்ற மூதாட்டியிடம் விசாரித்தபோது, கணவர் நடந்து வர முடியாமல் வீட்டில் உள்ளார். அரசு கொடுத்த நிவாரண தொகை ரூ.1,000த்தில் மீதியிருந்த பணத்துக்கு அவருக்கு மது வாங்க வந்ததாக கூறினார். இதை கேட்டு கலெக்டர் அதிர்ச்சி அடைந்து புறப்பட்டார்.

குடைக்கு 10 வாடகை
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரில் டாஸ்மாக் கடைகள் திறக்கும் முன்பே குடிமகன்கள் வரிசை கட்டி இடம் பிடித்து நின்றனர். இடைவெளியை கடைபிடிக்க குடைபிடித்து வரும்படி திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் பெரும்பாலானவர்கள் குடை கொண்டு வராததால், சிலர் தாங்கள் பயன்படுத்திய குடையை 10 ரூபாய் வாடகைக்கு விட்டனர்.

Tags : bar ,minister ,area ,house ,Madurai ,home minister ,pub closure , Minister's House, Liquor Store, Women, Madurai Chellur
× RELATED பார் ஊழியர்களுக்கு அரிவாள் வெட்டு