×

கொரோனாவால் பிற தொழில் துறைகளை விட சிறு, குறு தொழில்களுக்கு அதிக பாதிப்பு ஏன்?

சென்னை: கைத்தொழில் ஒன்று இருந்தால் கவலையே இல்லை. சொந்தக் காலில் நிற்கலாம் என்ற கனவோடு சுய தொழில் தொடங்கியவர்கள் ஏராளம். ஆனால், இப்படிப்பட்ட கனவோடு தொடங்கப்பட்ட பல சிறு தொழில்கள், இன்று கைதூக்கிவிட ஆளில்லாமல் தரை மட்டமாக வீழ்ந்து கிடக்கின்றன. இந்த வீழ்ச்சி இன்று நேற்றல்ல, அரசின் பல்வேறு கொள்கை முடிவுகள், பொருளாதார மற்றும் வரி சீர்திருத்த மாற்றங்கள்  இந்தத் துறையை சம்மட்டியால் அடிப்பது போல தாக்கியிருக்கிறது. பணமதிப்பு நீக்கத்தின்போது எழ முடியாமல் வீழ்ந்த துறைகள் பட்டியலில் முதலிடம் சிறு, குறு, நடுத்தர தொழில்கள்தான். இதுபோல், ஜிஎஸ்டிக்கு பிறகும் நிறையவே தடுமாற்றம் அடைந்தது. தற்போது கொரோனா என்ற சூறாவளி நடுத்தர தொழில்களை வேரோடு சாய்த்து விட்டது என்றுதான் கூற வேண்டும்.

பெயரளவில் சிறு தொழில்கள் என கூறினாலும், ஆண்டு வர்த்தக வரம்புக்கு ஏற்ப இவற்றை அரசு வகைப்படுத்தியுள்ளது. 25 லட்சம் வரை ஆண்டு வர்த்தகம் உள்ளவை குறு தொழில்கள். இதுபோல் ஆண்டு வர்த்தகம் சிறு தொழில்களுக்கு  25 லட்சத்துக்கு மேல் 5 கோடி வரை நடுத்தர தொழில்களுக்கு ₹5 கோடிக்கு மேல் 10 கோடி வரை என வகைப்படுத்தியுள்ளது மத்திய அரசு. குறு, சிறு, நடுத்தர தொழில்துறையின் கடந்த 2018-19 நிதியாண்டு அறிக்கையின்படி நாடு முழுவதும் சுமார் 6.34 கோடி, குறு, சிறு, நடுத்தர தொழில்கள் (எம்எஸ்எம்இ) உள்ளன. இவற்றில் ஏறக்குறைய 51 சதவீத தொழில்கள் ஊரகப்பகுதிகளில்தான் இருக்கின்றன.

விவசாயம், ஆட்டோமொபைல் துறை போல, மிக அதிக வேலைவாய்ப்பு வழங்கும் துறை இது. இதன்மூலம் சுமார் 11 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. எம்எஸ்எம்இ எண்ணிக்கையோடு ஒப்பிட்டால், சராசரியாக ஒரு தொழிலில் 2 பேருக்குதான் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒரு வகையில் இது அவல நிலைதான்.ஆண்டு வர்த்தகம் அடிப்படையில் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் என வகைப்படுத்தப்பட்டு இருந்தாலும், 99.5 சதவீத தொழில்கள் குறு தொழில் பிரிவில்தான் வருகின்றன. மற்ற பிரிவில் சுமார் 5 கோடி பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.  நாடு முழுவதும் உள்ள எம்எஸ்எம்இக்களில், சுமார் 50 சதவீத தொழில்கள் உத்தர பிரதேசம் (14%), மேற்கு வங்கம் (14%), தமிழகம் (8%), மகாராஷ்டிரா (8%), கர்நாடகா (6%), பீகார் (5%), ஆந்திரா (5%) மாநிலங்களின் பங்களிப்பாக உள்ளன. எனவேதான், எம்எஸ்எம்இ தொழி்ல்கள் நசிந்ததால் இந்த மாநிலங்கள் அதிகம் பாதிப்பு ஆளாகியுள்ளன. குறு, சிறு தொழில்கள் பல பதிவு செய்யாமலேயே இயங்குகின்றன.

சில தொழில்கள் வீடுகளில் இருந்தே நடத்தப்படுகின்றன. சில வளர்ந்த நாடுகளில் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் நலிவடைந்தால் அவற்றுக்கு நேரடியாக சம்பள மானியம், கூடுதல் கடன்கள் வழங்கப்படுகிறது. ஆனால், இங்கு நலிவடைந்த சிறு தொழில்களை கண்டறிந்து, அவர்களுக்கு பலன் கிடைக்கச் செய்வதே சவாலாக உள்ளது.எம்எஸ்எம்இக்களுக்கு மிகப்பெரிய சிக்கல், நிதிப்பற்றாக்குறைதான். பணம் புரட்டுவதே அவற்றுக்கு மிகப்பெரிய போராட்டமாக ஆகி விடுகிறது. வங்கிகள் மூலம் எம்எஸ்எம்இக்களுக்கு அதிக கடன் வழங்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வந்தாலும், தேவைக்கும், கடன் கிடைப்பதற்கும் உள்ள இடைவெளி மிக அதிகம் என தொழில்துறையினர் கூறுகின்றனர்.இத்துறையினருக்கு இரண்டு வகையில் பணப் பிரச்னை ஏற்படுகிறது. ஒன்று, சப்ளை செய்ததற்கு பணம் உடனே கிடைப்பதில்லை.

அரசு தரப்பிலும் ஜிஎஸ்டி ரீபண்ட்கள் தாமதம் ஆகின்றன. அதற்குள் பணத்தை புரட்டவும் தொழிலை நடத்தவும் சிரமப்படுகின்றனர். இதையாவது சரி செய்ய வேண்டும் என தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர்.இதையெல்லாம் செய்யாவிட்டால், தற்போதுள்ள நிலையில், சில குறு, சிறு, நடுத்தர தொழில்களால் இன்னும் மூன்று மாதங்களாவது இயங்குமா என்பது கேள்விக்குறிதான். ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டால் நடுத்தர தொழில்களை காப்பாற்றுவது கூட கடினம்தான் எனவும், அதனால் இந்த துறையில் வேலையிழப்பை நினைத்துக்கூட பார்க்க முடியாது எனவும் தொழில்துறையினர்் கூறுகின்றனர்.

கடன் கிடைப்பதிலும் சிக்கல்
கடந்த 2018ம் ஆண்டு, உலக வங்கியின் அங்கமான, சர்வதேச நிதி கழகம் வெளியிட்ட  அறிக்கையின்படி, உண்மையான தேவையில் சுமார் மூன்றில் ஒரு பகுதி (சுமார் 11 லட்சம் கோடி) கடன் மட்டுமே வங்கிகள் மூலம் சிறு, குறு, நடுத்தர  தொழில்துறைக்கு கிடைக்கிறது. மீதி சுமார் ₹25.8 லட்சம் கோடியை புரட்ட கந்து  வட்டி போன்ற பிற வழிகளைத்தான் நாட வேண்டும் என்ற நிலைக்கு சிறு தொழில்கள்  தள்ளப்படுகின்றன. இதனால்தான், ரிசர்வ் வங்கியும் எம்எஸ்எம்இக்களுக்கு கடன்  வழங்குவதை ஊக்குவித்து வருகிறது.
 
ஆனால், தள்ளாட்டத்தில் உள்ள  எம்எஸ்எம்இக்களால் புதிதாக வழங்கும் கடனை திரும்ப செலுத்த முடியுமா என்ற கவலை வங்கிகளுக்கு  ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே கொடுத்த கடன்களை வசூலிக்க முடியுமா என்ற நிலையும்  ஏற்பட்டுள்ளது என வங்கி அதிகாரிகள் சிலர் கூறுகின்றனர். எனவே,  எம்எஸ்எம்இக்களுக்கு அடமானம் போன்றவை இல்லாமல் கடன் வழங்க வேண்டும்,  ஜிஎஸ்டி சலுகைகள் வழங்கப்பட வேண்டும், உடனடி நிதியுதவி தேவை என்ற  கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. பிக்கி உள்ளிட்ட அமைப்புகளும் இதை  வலியுறுத்துகின்றன.

அழிவின் விளிம்பில் உள்ளது
நிலுவையை வழங்குங்கள்: நிதின் கட்கரி வேண்டுகோள்
சிறு, குறு, நடுத்தர தொழில்கள் (எம்எஸ்எம்இ) நிலை பற்றி நேற்று குறிப்பிட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ‘‘எம்எஸ்எம்இ நிறுவனங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. மிக மோசமாக பாதிக்கப்பட்டு, தொழில் நடத்தவே போராடுகின்றன. எனவே, பெரிய தொழில்துறைகள் மற்றும் நிறுவனங்கள், எம்எஸ்எம்இக்களுக்கு ஒரு மாதத்துக்குள் நிலுவை தொகையை வழங்க வேண்டும். இது மிகப்பெரிய உதவியாக இருக்கும்’’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறு, சிறு, நடுத்தர தொழில்கள் எண்ணிக்கை (லட்சங்களில்)
தொழில்கள்    ஊரக பகுதி    நகர் பகுதி    மொத்தம்    பங்களிப்பு
உற்பத்தி        114.14    82.5    196.64    31%
வர்த்தகம்        108.71    121.64    230.35    36%
பிற சேவைகள்    102    104.85    206.85    33%
மின்சாரம் (மின் உற்பத்தி,
விநியோகம் சாராதவை)    0.03    0.01    0.03    -
மொத்தம்        324.88    309    633.87    100%
குறு, சிறு, நடுத்தர தொழில்களில் வேலை வாய்ப்பு (எண்ணிக்கை லட்சங்களில்)
தொழில்கள்    ஊரக பகுதி    நகர் பகுதி    மொத்தம்    பங்களிப்பு
உற்பத்தி        186.56    173.86    360.42    32%
வர்த்தகம்        160.64    226.54    387.18    35%
பிற சேவைகள்    150.53    211.69    362.22    33%
மின்சாரம் (மின் உற்பத்தி,
விநியோகம் சாராதவை)    0.06    0.02    0.07    -
மொத்தம்        497.79    612.11    1109.89    100%

பகுதி வாரியாக உள்ள தொழில்கள் எண்ணிக்கை (லட்சங்களில்)
பகுதி    குறு தொழில்    சிறு தொழில்    நடுத்தர தொழில்    மொத்தம்    பங்களிப்பு
ஊரகம்        324.09    0.78    0.01    324.88    51%
நகர்ப்புறம்        396.43    2.53    0.04    399    49%
மொத்தம்        630.52    3.31    0.05    633.88    100%

சிறு, குறு தொழில்கள் 7 மாநிலங்களின் பங்களிப்பு

மாநிலம்        பங்களிப்பு
உத்தர
பிரதேசம்        14%,
மேற்கு வங்கம்    14%
தமிழகம்        8%
மகாராஷ்டிரா    8%
கர்நாடகா        6%
பீகார்        5%
ஆந்திரா        5%

ஆண்டு வர்த்தகத்தின்படி தொழில் வகைப்பாடு
குறு தொழில் 25 லட்சம் வரை
சிறு தொழில் 25 லட்சத்துக்கு
மேல் 5 கோடி வரை
நடுத்தர தொழில் 5 கோடிக்கு மேல்
10 கோடி வரை(இந்த வரையறையில்
மாற்றங்கள் செய்ய மத்திய அரசு தற்போது பரிசீலனை செய்து வருகிறது.)

Tags : businesses ,Corona , Corona, other industries, small and small businesses
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...