×

மத்திய அரசு வழங்க வேண்டிய 34,000 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு எப்போது வரும்? எதிர்பார்ப்பில் மாநிலங்கள்

புதுடெல்லி: கொரோனாவால் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையிலான ஜிஎஸ்டி இழப்பீடாக, மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய 34,000 கோடியை மாநிலங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.  ஜிஎஸ்டி அமலுக்கு வந்தபோதே, மாநிலங்களுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பீட்டை 5 ஆண்டுகளுக்கு ஈடுகட்ட மத்திய அரசு உறுதி அளித்தது. இதன்படி, குறிப்பிட்ட சதவீதத்துக்கு கீழ் வருவாய் குறையும் மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.  மாநிலங்களுக்கு கடந்த அக்டோபர் - நவம்பர் மாதத்துக்கான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை 2வது கட்டமாக 14,103 கோடியை ஏப்ரல் 7ம் தேதி மத்திய அரசு வழங்கியது. முன்னதாக கடந்த பிப்ரவரி 17ம் தேதி 19,950 கோடி வழங்கப்பட்டது.

இத்துடன் சேர்த்து மொத்தம் 34,013 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய இதே அளவு இழப்பீடு தொகை, அதாவது, 30,000 கோடி முதல் 34,000 கோடி, மாநிலங்களுக்கு வர வேண்டியுள்ளது.  டிசம்பர் - ஜனவரி மாதத்துக்கான இழப்பீடு, பிப்ரவரி மாதத்தில் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பொருளாதார மந்தநிலை மற்றும் இழப்பீடு வரி நிதியில் போதுமான இருப்பு இல்லாததால் இதனை வழங்க இயலவில்லை என மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் - மார்ச் மாதத்துக்கான இழப்பீடாக சுமார் 4,000 கோடி வர வேண்டியுள்ளது பஞ்சாப் நிதியமைச்சர் கூறியுள்ளார். இதுபோல், தமிழக அரசுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி பங்கீடாக 2,400 கோடி, சண்டிகாருக்கு 1,551 கோடி, மேற்கு வங்கத்துக்கு 2,393 கோடி பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மாநிலங்கள் ஜிஎஸ்டி இழப்பீடு மற்றும் பங்கீட்டு தொகையை மத்திய அரசிடம் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.  ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு 2 மாதங்களுக்கு ஒரு முறை இந்த இழப்பீடு கணக்கிட்டு வழங்கப்படுகிறது. இதுவரை மொத்தம் 2.45 லட்சம் கோடி. எனினும், இழப்பீடு தாமதமாக கிடைப்பது மாநிலங்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கொரோனாவால் ஊரடங்கு அமலில் உள்ளதால், மாநிலங்களுக்கு வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் வரி, மதுபானங்களின் விலையை மாநிலங்கள் உயர்த்த தொடங்கி விட்டன. ஊரடங்கு காலத்திலும், புதிய நாடாளுமன்ற கட்டிட திட்ட பணிக்கு ஒப்புதல் வாங்கியுள்ளது மத்திய அரசு. ஏற்கெனவே, இந்த நெருக்கடி நேரத்தில் ஜிஎஸ்டி வசூல் குறைந்ததை மாநில அரசுகளுக்கு உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

வசூல் குறைந்ததுதான் காரணமா?
ஜிஎஸ்டியில் மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்ட வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணித்திருந்தது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு வசூல் இல்லை. இதை காரணம் காட்டிதான் இழப்பீடு தாமதம் ஆவதாக மத்திய அரசு தெரிவித்தது. ஏற்கெனவே, மத்திய அரசிடம் இருந்து ஜிஎஸ்டி இழப்பீடு தாமதம் ஆவது தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் மாநிலங்கள் போர்க்கொடி தூக்கின. இதன்பிறகு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பர் மாதத்துக்கான இழப்பீடாக, 35,298 கோடியை மத்திய அரசு வழங்கியது. மாநில அரசுக்கு வர வேண்டிய பெரும்பாலான வரி வருவாய், ஜிஎஸ்டியால் பறிபோய் விட்டது. மத்திய அரசுக்கு பல வழிகளில் வருவாய் உள்ளது. எனவே, இதை காரணம் காட்டக்கூடாது என மாநில அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை வழங்கப்பட்ட இழப்பீடு
2017 ஜூலை - 2018 மார்ச்    48,785 கோடி
2018 ஏப்ரல் - 2019 மார்ச்    81,141 கோடி
2019 ஏப்ரல் - மே        17,789 கோடி
2019  ஜூன் - ஜூலை        27,956 கோடி
2019 ஆகஸ்ட் - செப்டம்பர்    35,298 கோடி
2019 அக்டோபர் - நவம்பர்    34,053 கோடி
மொத்தம்            2,45,022 கோடி

Tags : government ,States , Central Government, GST, States, Corona
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...