×

டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய குடிமகன்கள் கூட்டம்: தமிழகம் முழுவதும் 250 கோடிக்கு மது விற்பனை? நாட்டிலேயே தமிழகம் முதலிடம்

* 3 கி.மீ. தூரம் பல மணி நேரம் காத்திருந்து வாங்கிய கொடுமை

சென்னை: கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் மாநிலம் முழுவதும் 44 நாட்களுக்கு பின்னர் நேற்று திறக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து, கொளுத்தும் வெயிலில் நின்று வாங்கிச் சென்றனர். பல கடைகளில் மதுபாட்டில்கள் மதியமே விற்றுத்தீர்ந்தது. நேற்று ஒரே நாளில் 250 கோடி அளவுக்கு விற்பனை நடந்து இருப்பதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன. நாட்டிலேயே ஒரே நாளில் அதிக அளவில் தமிழகத்தில்தான் மது விற்பனை நடந்துள்ளது. இது மோசமான முன்னுதாரணம் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.  சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதி, கட்டுபடுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து தமிழகம் முழுவதும் 5,300 கடைகளில் 3,500 டாஸ்மாக் கடைகள் நேற்று முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை 50 வயதுக்கு மேற்பட்டவர்களும், மதியம் 1 மணி முதல் 3 மணி வரை 40 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்களையும், 40 வயதுக்கு கீழ் மாலை 3 மணிமுதல் 5 மணி வரை மதுபாட்டில் வாங்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. முன்னதாக, காலை 8 மணி முதல் மதுபாட்டில் வாங்க கடைகள் முன்பு குடிமகன்கள் கூட்டம், கூட்டமாக காத்திருந்தனர். சரியாக காலை 10 மணிக்கு கடை திறந்தவுடன், மதுபானங்கள் வாங்கும் ஆர்வத்தில் குடிமகன்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த கூட்டத்தை சமாளிக்க ஒவ்வொரு கடை முன்பும் 2 போலீசார் மட்டுமே பணியமர்த்தப்பட்டிருந்தனர். அவர்களுக்கு உதவியாக கடை ஊழியர்களும் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தி, குடிமகன்களை வரிசையாக நிற்க வைக்கும் பணியில் ஈடுபட்டனர். பலரும் மதுபாட்டில் வாங்கும் ஆர்வத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை.

முதலில் குடிமகன்கள் ஆதார் கார்டை காட்டிய பிறகே டோக்கன் விநியோகிக்கப்பட்டு அவர்களுக்கு மதுபாட்டில்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கூட்டத்தில் குடிமகன்கள் பலரும் முகக்கவசம் அணியவில்லை. ஆதார் கார்டுகளையும் கொண்டு வரவில்லை. இதனால், அவர்களுக்கு டோக்கன் தர முடியாது என்று டாஸ்மாக் ஊழியர்கள் கூறினர். இதனால், குடிமகன்களும், டாஸ்மாக் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதேபோன்று மற்ற மாவட்டங்களில் இருந்து வேலைக்காக தங்கியிருந்தவர்கள்,  மதுபாட்டில்கள் வாங்க வந்தவர்கள் தர மறுத்து திருப்பி அனுப்பபட்டனர்.

 இதனால், பல இடங்களில் ஊழியர்களுக்கு குடிமகன்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. கடையில் அதிகபட்சமாக 5 ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். இதனால், அவர்களை வைத்து கூட்டத்தை கட்டுபடுத்துவது மிகவும் சிரமமாக இருந்தது.  ஒரு நபருக்கு 2 பாட்டில் வழங்கப்படும் என்று கூறப்பட்ட போதிலும், பல இடங்களில் அந்த விதிமுறை பின்பற்றப்படவில்லை. 45 நாட்கள் டாஸ்மாக் கடைகள் பூட்டப்பட்டிருந்ததால், இதை பயன்படுத்தி கொண்டு கள்ளச்சந்தையில் மதுபாட்டில் விற்பனை செய்யப்பட்டது. இதனால், பல கடைகளில் மதுபாட்டில்கள் விற்றுத்தீர்ந்தது. சில கடைகளில் தேர்தலில் வாக்கு அளிப்பதற்கு அனுமதிப்பது போன்று, மாலை 5 மணிக்கு முன்னதாக வந்தவர்களுக்கு தேர்தல் நேரத்தில் வழங்கப்படுவதுபோல 100 டோக்கன் விநியோகிக்கப்பட்டு, அவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில் வழங்கப்பட்டன.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடையில் விற்பனை என அறிவிக்கப்பட்டன. இதனால், பல இடங்களில் மாலை 5 மணிக்கு பிறகு கடைகளை மூட போலீசார் அறிவுறுத்தினர்.  திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் போலீசார் சிலரை விரட்டியடித்து கூட்டத்தை கட்டுப்படுத்தினர். கள்ளக்குறிச்சி, சேனி, கடலூர், சேலம், புதுக்கோட்டை, பொன்னேரி, போளூர் ஆகிய இடங்களிலும் தள்ளுமுள்ளு இருந்தது. அதேபோல தர்மபுரி, செங்கம், மதுரை, பரமக்குடி ஆகிய இடங்களிலும் பொதுமக்கள் எதிர்ப்பு மதுக்கடைகளை் திறக்க பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு சில கடைகளை தவிர மாநிலம் பெரும்பாலான கடைகள் முன்பு சென்னை உயர் நீதிமன்றம் கூறிய எந்த விதிமுறைகளையும் முறையாக பின்பற்றவில்லை. இதனால், கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் அதை யாரும் பொருட்டாகவே கருதவில்லை.

 டாஸ்மாக் கடைகளில் சாதாரண நாட்களில் 80 கோடி முதல் 90 கோடி வரை விற்பனை நடைபெறும். விழாக்காலங்கள் மற்றும் பண்டிகை காலங்களில் 150 கோடி முதல் 200 கோடி வரை விற்பனை செய்யப்படும். கடந்த 44 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட  டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால், எப்போதும் இல்லாத அளவுக்கு கூட்டம் இருந்தது.  இதனால், நேற்று ஒரே நாளில் 200 கோடி முதல் 250 கொடி வரை வருவாய் கிடைத்து இருக்கும் என்று டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன. நாட்டில் உள்ள பெரிய மாநிலங்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு தமிழகம்தான் டாஸ்மாக் வருமானத்தில் முதல் மாநிலமாக உள்ளது. இது சமூகத்தை எங்கு கொண்டு செல்லும் என்று பெண்களும், சமூக ஆர்வலர்களும் அச்சம் கொண்டுள்ளனர். இது மோசமான சமூகத்தின் முன்னுதாரணம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Tags : country ,Citizens' Task Shop Tamil Nadu , Task Shops, Citizens, Tamil Nadu, Liquor Sales, Tamil Nadu
× RELATED நாட்டின் ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ்...