×

துபாயிலிருந்து சிறப்பு விமானத்தில் 200 தமிழர்கள் இன்று சென்னை வருகை : தனிமைப்படுத்துவது பற்றி உயர்அதிகாரிகள் ஆலோசனை

சென்னை: துபாயில் இருந்து சிறப்பு விமானத்தில் 200 தமிழர்கள் இன்று சென்னை வருகின்றனர். இவர்களை ஓஎம்ஆரில் உள்ள கல்லூரிகள், நட்சத்திர ஓட்டல்களில் தனிமைப்படுத்துவது பற்றி உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். சென்னை விமான நிலையத்தில்  தமிழக  அரசு முதன்மை செயலாளர் ராஜேஷ் லக்கானி தலைமையில் சிறப்பு ஆலோசனை கூட்டம்  நேற்று நடந்தது. காலை 11.30 மணிக்கு தொடங்கி பகல் 12.30 மணி வரை நடந்தது.  அதில் பொதுத்துறை செயலாளர் மைதிலி ராஜேந்திரன், டிஜிபி  சைலேந்திரபாபு, விமான நிலைய இயக்குநர் சுனில் தத் மற்றும் குடியுரிமை,  சுங்கத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில்,  வெளிநாடுகளிலிருந்து சிறப்பு தனி விமானங்களில் சென்னைக்கு அழைத்து  வரப்படும் இந்தியர்களை பாதுகாப்பான முறையில் 14 நாட்கள் தனிமைப்படுத்த  கொண்டு செல்வது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

அதோடு, சென்னை விமான நிலையத்தில்  அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை, குடியுரிமை, சுங்க சோதனை நடக்கும்  இடங்களில் பயணிகள் சமூக இடைவெளி விட்டு நிற்பதற்காக 6 அடிக்கு ஒரு  மஞ்சள்  கோடு வரையப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்தனர். மேலும், அவர்கள் யாரும்  பாதுகாப்பை மீறி வெளியில் சென்றுவிடாமல் கண்காணித்து வெளியே அழைத்து வந்து  வாகனங்களில் தங்க வைக்கும் இடங்களுக்கு கொண்டு செல்வது பற்றியும்  ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில், துபாயிலிருந்து சுமார் 200  தமிழர்களுடன் ஏர் இந்தியா முதல் சிறப்பு விமானம் இன்று மாலை 6.30 மணிக்கு  சென்னை சர்வதேச விமான நிலையம் வருகிறது. அதை தொடர்ந்து, முதல்கட்டமாக வரும்  14ம் தேதி வரை 11 சிறப்பு விமானங்கள் வருகின்றன.

அதில் மலேசியா,  சிங்கப்பூரிலிருந்து வரும் 2 விமானங்கள் திருச்சியில் சென்று  தரையிறங்குகின்றன. சென்னைக்கு வரும் 9 விமானங்களில் சுமார் 2,000 தமிழர்கள்  துபாய், குவைத், ஓமன், மலேசியா, பிலிப்பைன்ஸ், லண்டன், சிகாகோ, வங்கதேசம்  உள்ளிட்ட நாடுகளிலிலிருந்து வருகின்றனர்.
இந்த 2 ஆயிரம்  தமிழர்களையும் தனிமைப்படுத்தி வைத்து கண்காணிக்க செங்கல்பட்டு மாவட்டம்  ஓஎம்ஆர் சாலை பகுதியில் 3 தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் நட்சத்திர  அந்தஸ்து கொண்ட 5 ஓட்டல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதில் அவர்கள்  தங்குவதற்கு 5 விதமான முறையில் வசதி செய்யப்பட்டுள்ளது. இலவச தங்கும்  இடவசதியும் உண்டு.

இதுதவிர நாள் ஒன்றுக்கு ரூ.500லிருந்து ரூ.4 ஆயிரம் வரை கட்டணம் செலுத்தும் தங்கும் அறைகளும் உள்ளன. அவரவர் வசதிக்கு ஏற்ப எது வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்துகொள்ளலாம். இதை சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படும் முன்பே முடிவு செய்து அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

Tags : Tamils ,Dubai ,Chennai ,flight visit ,High ,flight , Dubai, Special Flight, 200 Tamils, Chennai
× RELATED தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்