×

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உதவும் வகையில் உலக மரபணு அமைப்புக்கு இந்திய மரபணு தொடர்கள்: அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் தகவல்

புதுடெல்லி: கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உதவும் வகையில் 53 இந்திய மரபணு தொடர்கள் உலக மரபணு அமைப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் 450 மரபணு தொடர்கள் வரும் 15ம் தேதிக்குள் அனுப்பப்பட உள்ளது என்று அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றினால் உலகளவில் 38 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதித்துள்ளனர். இதுவரை 2.6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத‍தால், உலகளவில் இந்த வைரஸ் தாக்கம் நாள்தோறும் பெருகி வருகிறது. இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், இந்தியாவில் இருந்து 53 மரபணு தொடர்கள் உலக மரபணு அமைப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மரபணு தொடர் என்பது டிஎன்ஏ நியூக்ளியோடைட்களின் வரிசையை கண்டுபிடிப்பதாகும். இதன் மூலம் ஒரு உயிரினத்தின் வளர்ச்சி மற்றும் அதனை பராமரிக்கும் மரபணுக்கள் எவ்வாறு ஒன்றிணைகின்றன என்பதை புரிந்து கொள்ள உதவுகிறது. இது தொடர்பாக அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) பொது இயக்குனர் சேகர் மாண்டே கூறியதாவது:
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் அங்கமாக டெல்லியில் செயல்படும் மரபணு மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனம், ஐதராபாத்தில் உள்ள செல்லூலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் மற்றும் சண்டிகரில் உள்ள உயிரி தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை இணைந்து மரபணு தொடர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன.

விரைவில் சிஎஸ்ஐஆரின் பிற நிறுவனங்களும் இந்த பணியில் சேர இருக்கின்றன. இதுவரை இந்தியாவில் இருந்து கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் 53 மரபணு தொடர்கள் உலக மரபணு தகவல் மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதிக்குள் மேலும் 450 மரபணு தொடர்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. இவற்றை ஆராய்ச்சி செய்வதன் மூலம் கொரோனாவுக்கு விரைவில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் இதுகுறித்து மரபணு மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனத்தின் இயக்குனர் அனுராக் அகர்வால் கூறுகையில், ``மரபணு தொடர்கள் எதில் இருந்து வைரஸ் தோன்றியது என்பதை கண்டுபிடிக்க உதவும். வைரஸ் எந்த வகையை சேர்ந்தது என்பதை கண்டறிவதன் மூலம் அது எந்த நாட்டில் இருந்து உருவானது என்பதை அறிய முடியும். அதே நேரம் இதற்கான மருந்துகள், தடுப்பு ஊசிகளை கண்டறியவும் பயன்படும்’’ என்று தெரிவித்தார்.

Tags : Indian ,World Genetic Organization ,Scientific and Industrial Research Council , Corona, Immunology, World Genetics Organization, Indian Genome Series: Scientific and Industrial Research Council
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...