×

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு வயது 58ல் இருந்து 59 ஆக உயர்வு: முதல்வர் எடப்பாடி திடீர் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசாரின் ஓய்வு வயது 58ல் இருந்து 59 ஆக உயர்த்தி முதல்வர் எடப்பாடி திடீரென உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார் என மொத்தம் 14 லட்சம் பேர் பயன் பெறுவார்கள். அதேநேரத்தில் இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்பு இதன்மூலம் பறிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் பணியாளர்களின் பணியில் இருந்து ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 59 வயதாக உயர்த்தி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த ஆணை அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து, தலைமை செயலாளர் சண்முகம் நேற்று ஒரு அரசாணை வெளியிட்டார். அதில், தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58ல் இருந்து 59 ஆக உயர்த்தப்படுகிறது. இந்த நடைமுறை 31-5-2020 முதல் ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பொதுத்துறை  நிறுவனங்களுக்கும் பொருந்தும்” என்று கூறியுள்ளார். தமிழக அரசின் உத்தரவால் தற்போது அரசு பணியில் இருக்கும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், போலீசார் என சுமார் 14 லட்சம் பேர் பயன் அடைவார்கள் என்று கூறப்படுகிறது.

தமிழக அரசின் இந்த உத்தரவு குறித்து ஜாக்டோ ஜியோ சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது: தமிழக அரசின் உத்தரவு வருகிற 31ம் தேதியில் இருந்து ஓய்வு பெறுபவர்களுக்கு ஒரு ஆண்டு கூடுதலாக பணியாற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பல அரசு ஊழியர் சங்கங்கள் ஓய்வு வயதை மத்திய அரசு போன்று 60 ஆக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது. அப்போதெல்லாம் அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால், தற்போது எந்த அடிப்படையில் ஒரு ஆண்டு ஓய்வு வயது  நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு விளக்கம் எதுவும் தெரிவிக்கவில்லை. சங்கநிர்வாகிகளிடமும் இதுபற்றி விவாதிக்கவில்லை.

வழக்கமாக ஒரு அரசு ஊழியர் ஓய்வுபெறும்போது 20 லட்சத்தில் இருந்து அதிகப்பட்சமாக 1 கோடி வரை கூட ஓய்வூதிய பலன் பெறுவார்கள். அதாவது, வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதிய பலன், 310 நாட்கள் லீவு சரண்டர், பணிக்கொடை உள்ளிட்டவைகள் அனைத்தும் மொத்த பணமாக கிடைக்கும். தற்போது, அரசு கஜானா காலியாக உள்ளது. 2020ம் ஆண்டு மே மாதத்தில் இருந்து 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சுமார் 10 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நிலையில் உள்ளனர். இவர்களுக்கு குறைந்தபட்சம் 20 லட்சத்தில் இருந்து அதிகப்பட்சமாக 1 கோடி வரை அரசு பணம் வழங்க வேண்டும். அரசு கஜானாவில் பணம் இல்லாததால், நிதி நெருக்கடியை சமாளிக்க தற்போதைய ஓய்வூதிய வயதை 59ஆக உயர்த்தி வழங்கி இருக்கலாம் என நினைக்கிறோம்.

அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை கூட்டியுள்ளதால், அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுகிறது. தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் 21 சதவீதத்தில் இருந்து 29 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில், அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய வயதை அதிகரித்துள்ளதில் ஏதோ உள்குத்து இருக்கிறது. அது மட்டுமல்லாமல் பல அரசு அதிகாரிகளின் பதவி உயர்வு ஒரு ஆண்டு தள்ளிப்போகும் அல்லது பதவி உயர்வு கிடைக்காமலே ஓய்வு பெறும் ஆபத்தும் உள்ளது. தற்போது பணியில் உள்ள அரசு ஊழியர்கள் குறிப்பாக இந்த மாதம் அல்லது ஒரு சில மாதங்களில் ஓய்வுபெறும் நிலையில் இருந்தவர்கள் இந்த அறிவிப்பை கண்டிப்பாக வரவேற்பார்கள்.

அதேபோன்று, ஆசிரியர் பணியில் உள்ளவர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்டில் பணியில் இருந்தால் அவர்களுக்கு கல்வியாண்டு முடியும் வரை அதாவது மே மாதம் வரை ஓய்வு வயது நீட்டிக்கப்படும். அவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. கொரோனா பணி காரணமாக கடந்த 2 மாதங்களாக டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு 2 மாதம் பணி  நீட்டிக்கப்பட்டது. அவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்துமா? என்று அரசு தெளிவாக கூறவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 55ஆக இருந்ததை 1979ம் ஆண்டு, மே மாதம் 58 ஆக அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் உயர்த்தி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

அரசு வேலை வாய்ப்புக்காக 90 லட்சம் இளைஞர்கள் காத்திருப்பு
தமிழகம் முழுவதும் 89 லட்சத்து 90 ஆயிரத்து 800 இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை எதிர்க்கொண்டு வருகின்றனர். பெரும்பாலான காலி பணியிடங்களில் மாநிலம் முழுவதும் நிரந்தர பணியாளர்களை நியமிப்பதற்கு பதிலாக தொகுப்பூதியம், சிறப்பு முறை கால ஊதியம், தினக்கூலி, அவுட்சோர்சிங் முறையில் தற்காலிகமாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுவருகின்றனர். மாநிலம் முழுவதும் 12 லட்சம் பணியிடங்களில் 50 சதவீத பணியிடங்கள் இந்த அடிப்படையில் தான் நியமிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 6 லட்சம் நிரந்தர பணியிடங்களில் 4.50 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளது.

இந்த பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆனால், அதை செய்யாமல் தற்போது அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 58ல் இருந்து 59 ஆக உயர்த்தியுள்ளது. இதன் மூலம் இந்தாண்டு ஓய்வு பெறவிருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்து பணிபுரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியிருப்பதாக அரசு ஊழியர்கள் தெரிவித்தனர்.

Tags : teachers ,Tamil Nadu ,Chief Minister ,Edappadi , Tamil Nadu Government Employees, Teachers Retirement, Elderly, Chief Minister Edappadi
× RELATED தொலை தூரத்தில் தேர்தல் பணி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு