×

பத்திரப்பதிவுத்துறையில் 3 லட்சம் லஞ்சம் பறிமுதல் விவகாரம்: வழக்குப்பதிவு செய்யாமல் 2 மாதமாக டிமிக்கி கொடுக்கும் லஞ்ச ஒழிப்பு போலீஸ்

* உயர் அதிகாரிகளை ஏமாற்றும் கீழ் மட்ட அதிகாரிகள்

சென்னை: சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தி ரூ.2.95 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு இரண்டு மாதங்களாகியும், போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இழுத்தடித்து வரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சார்பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராகப் பணிபுரிபவர் வாசுதேவன். இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில், பொதுமக்களை மிரட்டியும், சொத்தின் மதிப்பை அதிகரித்துக் காட்டியும், அரசுக்குப் பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படுத்தியும் லஞ்சம் பெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதுதொடர்பாக தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதனடிப்படையில் கடந்த மார்ச் 5ம் தேதி மாலை 5 மணிக்கு தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி மனோகரன், இன்ஸ்பெக்டர் இமயவரம்பன், மாவட்ட ஆய்வுக் குழும அதிகாரி ராஜேந்திரன், அடங்கிய குழுவினர் பேராவூரணி சார்பதிவாளர் அலுவலகத்தில் புகுந்து அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது சார்பதிவாளர் வாசுதேவனிடமிருந்து ரூ. 1.92 லட்சம், பத்திர எழுத்தர் சுதாகர் என்பவரிடமிருந்து ரூ. 1.03 லட்சம் எனவும் ஆக மொத்தம் ரூபாய் 2 லட்சத்து 95 ஆயிரம் கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த பணம் அனைத்தும் சார்பதிவாளர் வாசுதேவன் அன்றைய தினம் லஞ்சமாக பெற்றது என்பது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அலுவலகத்தை உட்புறம் பூட்டிக்கொண்டு வாசுதேவனிடமும், சுதாகரிடமும் விடிய விடிய விசாரணை நடத்தினர். பொதுவாக அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் திடீர் சோதனை நடத்திப் பணம் பறிமுதல் செய்யும்போது அடுத்த நாளோ அல்லது ஓரிரு நாட்களிலோ அந்த அதிகாரி மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்து தொடர்புடைய நீதிமன்றத்திற்கு அனுப்பிவைப்பர்.

ஆனால் இவ்வளவு பெரிய தொகை பறிமுதல் செய்யப்பட்டதாக பத்திரிகைகளுக்கு முதல்நாள் செய்தி மட்டுமே கொடுக்கப்பட்டது. அதன்பின்னர், பணம் பறிமுதல் குறித்து எந்த முதல் தகவல் அறிக்கையும்(எப்ஐஆர்) இதுவரை பதிவு செய்யப்படவில்லை.  இதன் பின்னணி குறித்த தகவல்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளன. அதாவது கிளார்க் பதவி முதற்கொண்டு பலகாலம் இந்தப் பகுதியிலேயே வாசுதேவன் பணிபுரிந்து வருகிறார். இவரது சொந்த ஊரும் அருகில்தான் உள்ளது.  இந்த அதிரடி சோதனைக்குப் பிறகும், என்னை யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்று அடுத்த நாளே அலுவலகத்தில் வழக்கம்போல பணிக்கு வந்து விட்டார். அதன் தொடர்ச்சியாக அவர் உள்ளூரில் உள்ள ஆளுங்கட்சிப் பிரமுகர்களை அணுகி அவர்களது உதவியுடன் இந்த விஷயத்தை நீர்த்துப்போகச் செய்ய தொடர்ந்து முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

அதன் காரணமாகவே அரசியல்வாதிகளின் பரிந்துரைக்கு அடிபணிந்து, இரண்டு மாதங்கள் கடந்த பின்னரும் தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யாமல் உள்ளனர் என்று தெரியவருகிறது. மேலும் இதுபோன்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரிகளை உடனடியாக முக்கியத்துவம் இல்லாத பணிக்கும், வேறு மண்டலத்திற்கும் மாற்றுவதே தற்போதும்  பதிவுத்துறையில் இருந்துவரும் நடைமுறையாகும். பணம் பறிமுதல் செய்யப்பட்ட அதிகாரிகள் இதுவரை பணியிடமாற்றமும் செய்யப்படவில்லை. பதிவுத்துறை உயர் அதிகாரிகளையும் அவர்கள் சரிக்கட்டிவிட்டதாக கூறப்படுகிறது.

இதற்குமுன்னர் தஞ்சாவூர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 10-10-2017 மற்றும் 16-9-2019 அன்று நடைபெற்ற சோதனை குறித்து அதற்கு அடுத்த நாளில் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. இந்த சோதனைகளின் தொடர்ச்சியாக அங்கு பணியிலிருந்த ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெகுதூரத்திற்குத் தூக்கியடிக்கப் பட்டனர். ஆனால் பேராவூரணி அலுவலத்தில் மட்டும் இரண்டு மாதங்கள் கடந்தும் இன்னும் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை, ஊழியர்களும் மாற்றப்படவில்லை. பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் என்ன ஆயிற்று என்று சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் இருக்கும் உயர் அதிகாரிகள் இதுவரை கேள்வி கேட்கவில்லை.

கீழ் மட்டத்தில் நடக்கும் எந்த விவகாரமும் மேல் மட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படுவதில்லை. அதிகாரிகளும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இல்லாமல் உள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றும் பல அதிகாரிகள் மீதே லஞ்ச குற்றச்சாட்டுகள் உள்ளன. அதில் ஒரு சிலர் இடம் மாற்றமும் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அந்த துறையில் மற்ற துறைகளைப் போல முறைகேடுகள் நடப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Tags : Department of Corrections ,Dimicky , Department of Corrections, Bribery, Criminal Records, Corruption Police
× RELATED அதிகாலை நேரத்தில் அதிக ஆட்களை...