×

3 பேருக்கு கொரோனா உறுதி

திருப்போரூர்: சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து காய்கறி வாங்குவதற்காக கோயம்பேடு சென்றவர்களை கண்டறிந்து, அவர்களில் 7 ஆயிரம் பேருக்கு முதற்கட்டமாக கொரோனா சோதனை நடத்தப்படுகிறது. இந்நிலையில் நாவலூர் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்யும், சுரேஷ் நகரை சேர்ந்த 30 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை, போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் தனிமைப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதைதொடர்ந்து, அவர் வசித்து வந்த பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டது. அப்பகுதியில் கிருமி நாசினி தெளித்து, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், அவரது கடைக்கு வந்து சென்றவர்களின் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதனால் நாவலூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதேபோல், திருப்போரூர் அடுத்த சிறுங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த 28 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவரை, போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அந்த வாலிபர், கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி மூட்டைகளை ஏற்றி இறக்கும் வேலை செய்து வந்தார். அவர் வசித்து வந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டது. திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அடுத்த நரசங்குப்பம் கிராமத்தை சேர்ந்த வியாபாரி, தினமும் கோயம்பேடு சென்று காய்கறிகளை வாங்கி வந்து அனுபுரத்தில் சில்லறை வியாபாரம் செய்தார். இவருக்கு, கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்தது.

அவரது ரத்த மாதிரியை, மருத்துவ குழுவினர் ஆய்வுக்கு அனுப்பியதில், கொரோனா தொற்று இருப்பது தெரிந்தது. இதையடுத்து அவரை, சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதைதொடர்ந்து, வியாபாரியின் மனைவி மற்றும் 2 குழந்தைகளை சதுரங்கப்பட்டினம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து, அவர்களை, வீட்டிலேயே தனிமைப்படுத்தினர். மேலும், அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்து, அப்பகுதிக்கு சீல் வைத்துள்ளனர்.

Tags : Corona , Corona, curfew
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...