×

கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் அவசர தேவைக்கு அனுமதி மறுக்கும் அதிகாரிகள்: சிகிச்சை, இறுதி சடங்கில் பங்கேற்க முடியாமல் பொதுமக்கள் அவதி

ஆரல்வாய்மொழி: ஊரடங்கு எதிரொலியாக ஆரல்வாய்மொழி சோதனைசாவடியில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு நபரும் முழுமையான பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் உரிய அனுமதி சீட்டு இருந்தால் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். குமரி மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லவும், பிற மாவட்டங்களில் இருந்து குமரிக்கு வரவும் கலெக்டர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அனுமதி சீட்டு பெற வேண்டும். ஆனால் குமரி மாவட்ட நிர்வாகம் அனுமதி சீட்டை உடனுக்குடன் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்பட்ட காவல்கிணறு, வடக்கன்குளம், ஆவரைகுளம்,  பழவூர் போன்ற பகுதிகளில் உள்ள பொது மக்கள் பல்வேறு நோய்களுக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனை, நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்ேபாது உள்ள நடைமுறையின்படி தொடர் சிகிச்சை பெற்று வருகிறவர்களுக்கும் குமரி மாவட்ட நிர்வாகம் பாஸ் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் நோயாளிகள் உரிய காலத்தில் மருத்துவ சிகிச்சை பெற முடியாத நிலையில் அவதியடைந்து வருகின்றனர்.

இவ்வாறு அவசர தேவைக்காக குமரி மாவட்டம் செல்கிறவர்களுக்கு அனுமதி அளிக்க திருநெல்வேலி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனால் காவல்கிணறு செக்போஸ்ட்டில் அவர்களுக்கு அனுமதி கிடைத்துவிடுகிறது. ஆனால் குமரி மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாததால் ஆரல்வாய்மொழி சோதனைசாவடியில் போலீசார் அவர்களை அனுமதிப்பதில்லை. சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள் தான் என்பது தெரிந்தாலும் கூட பாஸ் இல்லாததால் போலீசார் அவர்களை அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் கேரளாவை ேசர்ந்த 2 வாலிபர்கள் காட்டுப்புதூரை சேர்ந்த இயக்குநர் ஒருவரை சந்திக்க வந்தனர்.

இந்த தகவல் பூதப்பாண்டி காவல் நிலையத்திற்கு தெரியவந்தது. போலீசார் இருவரையும்  பூதப்பாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்ய கூறினர். சோதனையில் அவர்களுக்கு கொரானா தொற்று இல்லை என அறிக்கை வந்தது. பின்னர் அவர்கள் சொந்த ஊர் செல்ல கேரள அரசுக்கும், குமரி மாவட்ட நிர்வாகத்துக்கும் விண்ணப்பித்தனர். இதற்கு கேரள அரசு இருவரும் சொந்த ஊர் வரலாம் என அனுமதி அளித்தது. ஆனால் குமரி மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. பல நாட்களான பின்னரும் இதுவரை அனுமதி வழங்கவில்லை. இதனால் அவர்கள் என்ன செய்வது என தெரியாமல் இப்போதும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் காத்து கிடக்கின்றனர்.

இந்த நிலையில் ஆற்றூரை சேர்ந்த மூதாட்டி ஒருவர் கடந்த 4ம் தேதி இறந்தார். அவரது இறுதி சடங்கு இன்று காலை நடக்கிறது. இதற்காக சென்னையில் வசிக்கும் அவரது மகள் மற்றும் மருமகன் நேற்று புறப்பட்டு வந்தனர். இதற்காக அவர்கள் சென்னையில் விண்ணப்பித்து அனுமதி சீட்டு வாங்கி காரில் புறப்பட்டனர். நேற்று மாலை 4.30 மணியளவில் ஆரல்வாய்மொழி வந்து சேர்ந்தனர். சோதனைசாவடியில் போலீசார் சோதனையிட்டபோது அந்த அனுமதி சீட்டு மாதம் தவறுதலாக ஏப்ரல் என அச்சிடப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை தனிமைப்படுத்தி விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சொல்லும் தகவல் சரியானது என தெரியவந்தது.

என்றாலும் அரசு உத்தரவுபடி மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற கூறினர். இதன்படி அந்த தம்பதியினர் கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது சம்பந்தப்பட்ட அதிகாரி தரப்பில் அவர்களுக்கு சரியான பதில் அளிக்கவில்லை. இதனால் அவர்கள் பலமணி நேரமாக அங்கேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நீண்ட நேர போராட்டத்துக்கு பின் நள்ளிரவு 11.30 மணியளவில் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து அவர்களுக்கு அனுமதி கிடைத்தது. அதன்பின் அவர்கள் தாயின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள சென்றனர். இந்தசம்பவம் நேற்று அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொரோனா பரவலை தடுக்க அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்தாலும், அவசர கால தேவைக்கு அளிக்கப்படும் அனுமதியை அதிகாரிகள் உரிய நேரத்தில் காலதாமதம் இன்றி வழங்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : border ,funeral ,Kanyakumari district , Kanyakumari, Emergency Necessary Admission, Refuse Officers
× RELATED தமிழ்நாடு – ஆந்திர எல்லையான எளாவூரில் 32 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது