×

10 அடி உயர இரும்பு தடுப்பு வேலி அமைப்பு; புதுச்சேரி, தமிழக போலீசாரின் கெடுபிடியில் சிக்கி பரிதவிக்கும் இருமாநில மக்கள்: அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா?

புதுச்சேரி: தமிழக மக்களை தீண்டத்தகாதவர்போல் 10 அடி உயர தடுப்பு வேலியை புதுச்சேரி போலீசார் அமைத்து தடுத்ததால், தமிழக போலீசாரும் பதிலடியாக புதுச்சேரி மக்களை தங்கள் பகுதியில் தடுத்து கெடுபிடி செய்வதால் இருமாநில பொதுமக்கள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இவ்விவகாரத்தில் புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு மே 17ம்தேதி வரை அமலில் உள்ளது. இருப்பினும் அந்தந்த மாநிலங்கள் தங்கள் பகுதிக்கு ஊரடங்கில் தளர்வு அளித்து வருகின்றன. அதன்படி புதுச்சேரியில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு உள்ளூர் மக்கள் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளனர்.

கொரோனா பாதிப்பு புதுச்சேரியில் குறைவு என்பதால் மக்கள் பயமின்றி சாலைகளில் நடமாடி வருகின்றனர். இவர்களை பாதுகாக்கும் வகையில் புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களான கடலூர், விழுப்புரம் பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் அங்குள்ளவர்கள் புதுச்சேரிக்குள் நுழைவதை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. இதன் காரணமாக எல்லைகளில் போலீசார் குவிக்கப்பட்டு 24 மணி நேர கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. அத்தியாவசிய, அவசர தேவைக்கு இ-பாஸ்களுடன் வந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்களை உள்ளே விடுவதற்கு போலீசார் மறுத்து வருகின்றனர்.

இதனால் மாநில எல்லைகள் மட்டுமின்றி புதுச்சேரியை தமிழகத்துடன் இணைக்கும் குறுக்கு சாலைகளிலும் பதற்றமான சூழல் நிலவியது. குறிப்பாக முத்தியால்பேட்டை எல்லை இரும்பு தட்டிகள் மூலம் மூடப்பட்டது. இதேபோல் மேலும் பல இடங்களில் இரும்பு தட்டிகளால் சாலைகள் அடைக்கப்பட்டன. இதற்கு கோட்டக்குப்பம் மட்டுமின்றி புதுச்சேரியை ஒட்டிய தமிழக பகுதிகளான ஆரோவில்,  கண்டமங்கலம், புதுக்கடை, பெரிய காட்டுப்பாளையம், ரெட்டிச்சாவடி, நல்லாத்தூர், சொரப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். புதுச்சேரி மற்ற மாநிலங்களைபோல் ஒருங்கிணைந்த மாநிலம் கிடையாது.

புதுச்சேரி எல்லைக்கு இடையே இருபுறமும் தமிழக பகுதிகள் சூழ்ந்து காணப்படுகின்றன. இந்த இடைப்பட்ட பகுதிகளில் வசிக்கும் தமிழக மக்கள் வங்கி, மருத்துவம், அத்தியாவசிய சேவைக்காக இதுவரையிலும் புதுச்சேரி எல்லைக்குள் வந்து சிரமமின்றி வந்து சென்றனர். தற்போது புதுச்சேரி காவலர்களால் அவர்கள் விரட்டியடிக்கப்படும் சூழல் நிலவுவதால் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டு உள்ளனர். இருப்பினும் புதுச்சேரியைச் சேர்ந்த மக்கள் மற்றும் அதிகாரிகள் இடைபட்ட தமிழக பகுதிகளின் வழியாகத்தான அருகாமையில் உள்ள புதுச்சேரி பகுதிகளுக்கு செல்ல வேண்டி உள்ளது.

தமிழக மக்கள் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்படுவதை அறிந்த கடலூர் எஸ்பி அபிநவ், பதிலடியாக புதுச்சேரி மாநிலத்தின் நடுவில் உள்ள ரெட்டிச்சாவடி காவல்துறை மூலம் புதுச்சேரியைச் சேர்ந்தவர்களை தடுத்து நிறுத்தி அவர்களை பாதியிலே திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் இறங்கினார். இதனால் ரெட்டிச்சாவடியை சுற்றியுள்ள புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சிரமத்திற்கு தள்ளப்பட்டனர். அதுமட்டுமின்றி தாசில்தார், போலீசார் உள்ளிட்டோரையும் தமிழக காவல்துறை தடுத்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. உரிய ஆவணங்களுடன் வந்தவர்களை மட்டுமே அவர்கள் அனுமதித்தனர்.

இருமாநில காவல்துறையும் தங்களது எல்லையை பாதுகாப்பதில் போட்டா போட்டியுடன் இறங்கியுள்ளதால் இருமாநில மக்களும் வேதனையில் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே புதுச்சேரி அரசு இவ்விவகாரத்தில் தெளிவான முடிவை எடுத்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையை வழிநடத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக பகுதிகளான ரெட்டிச்சாவடி, கோட்டக்குப்பம் பகுதிகளை கடந்து புதுச்சேரி மக்கள் வந்து செல்ல வேண்டிய சூழல் இருப்பதால் சரியான வழிகாட்டுதல், நெறிமுறைகளை வகுத்து அதை செயல்படுத்த வேண்டுமென அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளும் வலியுறுத்தி உள்ளன.

 மருத்துவம், வேலை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்காக வந்து செல்லும் தமிழக மக்களை உரிய ஆவணங்கள் இருந்தால் உடனே அனுமதிக்க வேண்டுமெனவும், அப்போதுதான் தேவையில்லாத பிரச்னைகளை அடுத்தடுத்த நாட்களில் தவிர்க்க முடியும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து இருமாநில (புதுச்சேரி, கடலூர், விழுப்புரம்) அரசு அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனை கேட்டு சுமூக முடிவு எடுக்கப்பட வேண்டுமென பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை வலுத்து வருகின்றன.


Tags : Puducherry ,policemen ,Tamil Nadu ,state , Iron barrier fence, Puducherry, Tamil Nadu, people, government
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...