×

ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு; தமிழக அரசை கண்டித்து நாளை போராட்டம் நடத்தப்படும் என அரசு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: ஓய்வூதிய வயதை அதிகரித்ததற்கு அரசு ஊழியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அரசை கண்டித்து நாளை போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதால் ஏற்பட்டுள்ள அசாதாராண சூழ்நிலையில், தமிழக அரசு மத்திய அரசிடம் கொரோனா நிவாரண நிதியை கேட்டுப்பெற தைரியமில்லாமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் உரிமைகளில், அவர்கள் போராடி பெற்ற சலுகைகளில் அடுத்தடுத்து கை வைக்க தமிழக அரசு ஆரம்பித்தது. அதன் முதற்கட்டமாக ஜனவரி 2020 முதல் ஜூலை 2021 வரையிலான காலத்திற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியை நிறுத்தி மத்திய அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பை ஒட்டி தமிழக அரசு ஒரு அரசாணையை வெளியிட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் அனைவருக்கும் அகவிலைப்படி உயர்வை ஜூலை 2021 வரை நிறுத்தியுள்ளது.

இதன்மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் என அனைத்து அரசு ஊழியர்களின் பணத்திலிருந்து சுமார் ரூ.15,000 கோடியை எந்தவித நியாயப்படுத்தலும் இன்றி பிடுங்கிக்கொள்ள தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதைவிட வெட்கக்கேடான இன்னொரு செயலையும் தமிழக அரசு செய்துள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், ஓய்வூதியர்களும் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களும் அறிய நேர்ந்துள்ளது. இதுநாள் வரை மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய நிவாரணத் தொகையை பற்றி அறிவிப்புகள் எதுவும் கொடுக்காத நிலையில் அதை பெறுவதற்காக குறைந்தபட்சம் தமிழகத்தில் அனைவரும் சேர்ந்து குரலெழுப்பக்கூட முன் வராமல், ஈட்டிய விடுப்பின் 15 அல்லது 30 நாட்களை சரண்டர் செய்து தொகைபெறும் உரிமையை ஓராண்டு காலத்திற்கு தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பெறுவதை நிறுத்தியிருப்பதை வெட்கக்கேடு என்று சொல்லாமல் என்னவென்பது?
இதன்மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இந்த ஒரு ஆண்டுக்கு மொத்தமாக ரூ.2300 கோடி வரை பண இழப்பு ஏற்படுத்தியது.

இதற்கும் மேலாக தமிழக அரசு, அரசு ஊழியர்களின் ஜிபிஎப் தொகையின் வட்டி விகிதத்தை 7.9 சதவீதத்திலிருந்து 7.1 சதவீதமாகக் குறைத்து அரசு ஊழியர்களுக்கு கொரோனா அதிர்ச்சியைவிட பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதன்மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியின் மூலம் பெறும் வட்டி விகிதத்தில் 0.8 சதவீதம் இழக்க நேரிட்டது. தற்போது அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயதை 58 என்பதிலிருந்து 59 என உயர்த்தி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார். மக்கள் நலனில் அக்கறைக் கொண்டுள்ள எந்தவொரு அரசு ஊழியர் ஆசிரியர்- அமைப்பும் குறிப்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தமிழக அரசிடம் ஓய்வுபெறும் வயதை உயர்த்தச் சொல்லி கோரிக்கை வைக்கவில்லை. இந்த நடவடிக்கையானது எந்தவகையிலும் மாநில அரசின் நிதி நிலையினை மேம்படுத்தாது என்பதோடு மட்டுமல்லாமல், ஓராண்டிற்கு தற்போது வழங்க வேண்டிய ஓய்வூதியப் பலன்களைத் தள்ளிப் போடுவதற்கான ஒரு தற்காலிக நடவடிக்கை என்பதுதான் யதார்த்தம்.

மேலும், பதவி உயர்வினை எதிர்நோக்கி காத்திருக்கும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஓராண்டு காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்தப் போக்கானது, அரசு ஊழியர் ஆசிரியர் என்ற சமூகத்தினையும் தாண்டி, தமிழகத்தில் வேலைவாய்ப்பிற்காகக் காத்திருக்கும் இலட்சக்கணக்கான இளைஞர்களின் அரசுப் பணி என்ற கனவினை முற்றிலுமாக ஓராண்டிற்கு முடக்கும் நடவடிக்கை என்பதோடு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஓராண்டிற்கு எந்தவித பணி நியமன நடவடிக்கையினையும் மேற்கொள்ள இயலாத சூழ்நிலையினை உருவாக்கி உள்ளது. இந்த நடவடிக்கையானது, 2003ஆம் ஆண்டு தமிழக அரசு வேலை நியமனத் தடைச் சட்டத்தை இயற்றி, ஐந்தாண்டுகளுக்கு அரசின் காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கு தடை விதித்ததைப்போல், ஓராண்டிற்கு அரசுப் பணிகளுக்கு தடை என்ற ஒரு நிலையினை தமிழக அரசு மறைமுகமாக உருவாக்கி உள்ளது.

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆதி சேஷய்யா அவர்கள் தலைமையில் காலிப் பணியிடங்களை தனியார் வசம் ஒப்படைப்பதற்கான ஒரு குழுவினை அரசாணை 56ன் கீழ் அமைத்து, அந்தக் குழு தமிழக அரசிடம் அறிக்கையினை அளித்து, அதற்கான பணியினை தமிழக அரசு முழு வீச்சில் செயல்பட்டுக் கொண்டுள்ளது.  தற்போது ஓய்வுபெறும் வயதினை 59 என உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது, காலிப் பணியிடங்களை மொத்தமாக தனியார்வசம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை ஓராண்டிற்குள் செய்வதற்கான வழிகளை மேற்கொள்வதற்கான காலஅவகாசமாக எண்ண வேண்டியுள்ளது.  இதன்மூலம் இந்தியாவிலேயே 69 விழுக்காடு இடஒதுக்கீட்டின்மூலம் பாதுகாக்கப்பட்டுவரும் சமூக நீதி என்பது கேள்விக்குறியாகி உள்ளது. மேலும், மே 2020 முதல் ஏப்ரல் 2021 வரையிலான காலத்தில் ஏறத்தாழ 30,000 பேர் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறுவார்கள்.

பணியிலிருந்து ஓய்வுபெறும் ஊழியருக்கு சராசரியாக ரூ.20 இலட்சம் ஓய்வூதிய காலப் பலன்களைப் பெறுவார் என்று வைத்துக் கொண்டால், இந்த காலத்தில் அரசிற்கு இதனால்  ரூ.6,000 கோடி தொகையானது மிச்சமாகும். இந்தத் தொகையினை அப்படியே மே 2021 முதல் ஏப்ரல் 2022 வரையிலான காலத்திற்கு தற்காலிகமாக ஒத்திவைக்க முடியுமே தவிர, இந்தத் தொகையினை ஓய்வு பெறுவோருக்கு கொடுக்கத்தான் வேண்டும். மேலும் இளைஞர்களின் வேலைவாய்ப்பினை காத்திடும் வகையிலும் அரசு ஊழியர் ஆசிரியர் பதவி உயர்வினை பாதுகாக்கும் வகையிலும், அரசு ஊழியர் ஆசிரியர் ஓய்வுபெறும் வயதினை 59 என உயர்த்தி வெளியிடப்பட்ட அரசாணையை உடனடியாக ரத்து செய்து  அறிவிப்பு வெளியிட வேண்டும் என மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. அரசின் கவனத்தை ஈர்த்திட நாளை தமிழகம் முழுவதும் அரசு அலுவலக வளாகங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஆர்ப்பாட்ட நிகழ்வுகள் சமூக விலகலை கடைப்பிடித்து உரிய பாதுகாப்பு எச்சரிக்கையுடன் கரத்தால் தனித்து நின்றும், கருத்தால் ஒன்றிணைந்தும் மிக சக்தியாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவுக்கப்பட்டுள்ளது.

Tags : State ,employees union , Leisure, Government of Tamil Nadu, Government Employees Union
× RELATED ஊழல் குற்றச்சாட்டில்...