×

ரேஷன் அரிசியை சாலையில் கொட்டி 2ம் நாளாக பொதுமக்கள் போராட்டம்: சமாதானம் செய்ய வந்த தாசில்தார் முற்றுகை

ஈரோடு: ஈரோட்டில் ரேஷன் கடையில் தரமற்ற அரிசி விநியோகம் செய்வதாக கூறி சாலையில் அரிசியை கொட்டி 2ம் நாளாக பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு சமாதானம் செய்ய வந்த தாசில்தாரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு வீரப்பன்சத்திரம் அருகே பெரியவலசு வள்ளியம்மை வீதியில் ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில் வள்ளியம்மை வீதி 1 மற்றும் 2வது வீதிகள், ராதாகிருஷ்ணன் வீதி ஆகிய 3 வீதிகளை சேர்ந்த பொதுமக்கள் பொருட்களை வாங்கி வருகின்றனர். இங்கு 721 கார்டுதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது.இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு 20 கிலோ அரிசி வழங்கப்பட்டது. அந்த அரிசி தரமற்ற நிலையில் இருந்தது. ஆனால், மத்திய அரசு அறிவித்த வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு நேற்று வழங்கப்பட்ட 5 கிலோ அரிசி தரமாக இருந்தது.இதையறிந்த பொதுமக்கள் ரேஷன் கடை முன்பு திரண்டனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாங்கிய தரமற்ற அரிசியை கொண்டு வந்து சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினர். கொரோனா ஊரடங்கால் வேலை இழந்து உணவுக்கு தவித்து வரும் நிலையில் ரேஷன் கடையில் வழங்கப்பட்ட தரமற்ற அரிசியை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக மக்கள் குற்றம்சாட்டினர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், `இந்த ரேஷன் கடையில் கடந்த ஒரு வாரமாக வழங்கப்பட்ட அரிசி தரமற்றதாக உள்ளது. கோதுமையும் வழங்கப்படுவதில்லை. நல்ல அரிசியை பதுக்கி வைக்கின்றனர். கார்டுதாரர்களுக்கு நல்ல அரிசி வழங்குவதில்லை’ என்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வீரப்பன்சத்திரம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கு மக்கள் உடன்படவில்லை. இதனால், ஈரோடு தாசில்தார் பரிமளாதேவி ரேஷன்கடைக்கு வந்தார். அப்போது அவரை மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். சிறிது நேரத்திற்கு பின் வட்ட வழங்கல் அதிகாரியை வரச் சொல்கிறேன் என கூறி விட்டு அங்கிருந்து சென்றார்.

நீண்டநேரம் ரேஷன் கடை முன்பு மக்கள் திரண்டிருந்தனர். அதன்பின் வந்த வட்ட வழங்கல் அதிகாரிகள், பொதுமக்களிடம் அரிசி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. வந்த உடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர். ஈரோட்டில் ரேஷன் கடையில் தரமற்ற அரிசி  விநியோகம் செய்வதாக கூறி சாலையில் அரிசியை கொட்டி நேற்று முன்தினமும் போராட்டம் நடந்தது. இந்த நிலையில் நேற்றும் 2ம் நாளாக பொதுமக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Road , Pour ,ration, Civil Struggle , Dasildar ,Peace
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...