×

ஐரோப்பிய நாடுகளில் இருந்து மாங்கூழுக்கு ஆர்டர் கிடைக்காததால் மாங்காய் கொள்முதல் செய்ய ‘ஜூஸ்’ நிறுவனங்கள் தயக்கம்: வேதனையில் கிருஷ்ணகிரி மா விவசாயிகள்

கிருஷ்ணகிரி: கொரோனா பாதிப்பால் ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஆர்டர்கள் கிடைக்காததால், ஜூஸ் தயாரிப்பு நிறுவனங்கள் மாங்காய் கொள்முதல் செய்ய தயக்கம் காட்டி வருகின்றன. இதனால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.தமிழகத்தில் மாங்கனி உற்பத்தியில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இங்கு சுமார் 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு தோத்தாபுரி, பீத்தர், அல்போன்சா, மல்கோவா, செந்தூரா, காலாப்பட், பங்கனப்பள்ளி, ருமானி, பெங்களூரா உள்ளிட்ட பல்வேறு ரக மாங்காய்கள் சாகுபடி செய்யப்பட்டு, வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 80க்கும் அதிகமான சிறு மற்றும் பெரிய அளவிலான மாங்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வந்தன. இதில் தற்போது 25 நிறுவனங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. இந்நிறுவனங்களில் தயாரிக்கப்படும் மாங்கூழ், துபாய், சவுதிஅரேபியா, ஏமன், சிரியா, ஈரான், மலேசியா, சீனா, ஜெர்மன், பிரான்ஸ் உள்பட ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை மாங்கூழ் தயாரிக்கப்படுவது வழக்கம்.

 ஆனால் இவ்வாண்டு கொரோனா தொற்றால் உலக நாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், நடப்பாண்டு மாங்கூழுக்கு போதிய ஆர்டர் கிடைக்காததால், மாங்கூழ் தயாரிக்கும் நிறுவனங்கள் தவித்து வருகின்றன. ஏற்கனவே மழை இல்லாமல் இந்த ஆண்டு 50 சதவீதம் மட்டுமே மா விளைச்சல் உள்ள நிலையில், மாங்கூழ் நிறுவனங்களுக்கும் ஆர்டர் இல்லாததால், மாங்காய் கொள்முதல் செய்ய மாட்டார்கள் என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். அத்துடன் கொரோனா பிரச்னையால் அரசு விதித்துள்ள நிபந்தனைகளால் மாங்கூழ் நிறுவனத்தை நடத்துவது பெரும் சவாலாக உள்ளதாக மாங்கூழ் தயாரிக்கும் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.  இதுகுறித்து, மாங்கூழ் உற்பத்தியில் தமிழக அளவில் முதலிடத்தில் உள்ள தேவராஜ் பல்ப் நிறுவன உரிமையாளர் மதியழகன் கூறியதாவது: கடந்த ஆண்டு ஒரு டன் மாங்காய் 10 ஆயிரம் முதல் 22 ஆயிரம் வரை கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு 4 லட்சம் டன் மாங்காய் கொள்முதல் செய்யப்பட்டு, இரண்டரை லட்சம் டன் மாங்கூழ் ஏற்றுமதி செய்யப்பட்டன. மீதம் 40 சதவீதம் மாங்கூழ் இருப்பு உள்ளது. மாங்கூழ் சீசன் நேரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த ஆண்டு புதிய ஆர்டர்கள் எதுவும் வரவில்லை.

இந்நிலையில் கடந்த 3 நாட்களாக விவசாயிகளிடம் இருந்து மாங்காய் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பிரச்னையால் நிறுவனத்திற்கு வரும் வாகன ஓட்டிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு, மாஸ்க் அணிவித்து, கையிலும், வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே தொழிற்சாலைகளுக்குள் அனுமதித்து, சமூக விலகலை கடைபிடித்து ஆட்கள் வேலை செய்கின்றனர்.அண்டைய மாநிலங்களில் மாவிற்கு அரசே ஆதார விலையை நிர்ணயம் செய்கிறது. மாங்கூழ் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் விலையில், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டால் அந்த பணத்தை அரசே விவசாயிகளுக்கு வழங்கி விடுகிறது. இதனால் மாங்கூழ் நிறுவனமும், விவசாயிகளும் பாதிப்பதில்லை. எனவே, அதே நடைமுறையை தமிழக அரசும் கடைபிடிக்க வேண்டும். மாங்காய்களை கொள்முதல் செய்து 7 நாட்கள் இருப்பு வைத்து பின்னர் அவற்றை அரவைக்கு அனுப்பப்படுகிறது. ஆனால் கொரோனா தொற்றால் பாதிப்பு ஏற்பட்டு, அரசு நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுவதோடு, விவசாயிகளுக்கும் உரிய தொகையையும் வழங்க முடியாத நிலை ஏற்படும் என்பதால், ஒவ்வொரு நிறுவனமும் அச்சத்தில் இயங்கி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Tags : companies ,Krishnagiri ,flour farmers ,countries ,European ,mango farmers , Justified, mangoes, Krishnagiri, mango ,
× RELATED ஆடு, மாடு, கோழிகளுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க தடுப்பு முறைகள்