×

ஊரடங்கால் கூவாகம் செல்ல முடியாததால் தூத்துக்குடியில் திருநங்கைகள் சிறப்பு வழிபாடு

தூத்துக்குடி: ஊரடங்கு காரணமாக கூத்தாண்டவர் கோயிலுக்கு செல்ல முடியாத திருநங்கைகள் தூத்துக்குடியில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.மகாபாரதப் பெருங்காதையில் அர்ச்சுனனால் கவரப்பட்டு கர்ப்பமாக்கப்பட்ட வேடுவப் பெண்ணான நாகக்கன்னியின் மகன் அரவான். குருஷேத்திர யுத்தத்தில் பாண்டவர் பக்கம் வெற்றி கிடைக்க “எந்த குற்றமும் இல்லாத சகல லட்சணமும் பொருந்திய ஒரு மனிதப்பலி தங்கள் தரப்பில் முதல் பலியாக வேண்டும்” என ஆருடம் கூறுகிறது. பாண்டவர் தரப்பில் இவ்வாறு சாமுத்திரிகா லட்சணம் பொருந்தியவர்களாக இருப்பவர்கள் அர்ஜூனன், அவன் மகன் அரவான், கிருஷ்ணர். அர்ஜூனனும், கிருஷ்ணரும் தான் இந்த போருக்கு முக்கியமானவர்கள் என்பதால் அரவானைப் பலியாக்க முடிவு செய்து இருவரும் அவனை அணுகுகின்றனர். அரவான் பலிக்கு சம்மதித்தாலும், அவனுக்கான இறுதி ஆசையாக ஒரு பெண்ணுடன் ஒரு நாள் இல்லற வாழ்வை முடித்த பின்பே தான் பலிக்களம் புகுவேன் என சொல்கிறான். எந்தப் பெண்ணும் இதை ஏற்க முன்வரவில்லை.

இறுதியாக கிருஷ்ணரே மோகினி அவதாரமெடுத்து அரவானை மணக்கிறார். ஒரு நாள் இல்லற வாழ்விற்குப் பின் பலிக்களம் புகுகிறான் அரவான். விதவைக் கோலம் பூணுகிறாள் மோகினி. இந்த கதையின் அடிப்படையில் மோகினியாய் தம்மை உணரும் அரவாணிகள் கூடி வரும் நிகழ்வாக விழுப்புரம் அருகே கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா உள்ளது.சித்திரா பவுர்ணமியன்று கூத்தாண்டவராகிய அரவானைக் கணவனாக நினைத்துக் கொண்டு கோயில் அர்ச்சகர் கையால் திருநங்கைகள் அனைவரும் தாலி கட்டிக் கொள்வர். இரவு முழுவதும் தங்களது கணவனான அரவானை வாழ்த்திப் பொங்கல் வைத்து கும்மியடித்து ஆட்டமும் பாட்டமுமாக மகிழ்ச்சியாயிருப்பர். பொழுது விடிந்ததும் அரவானின் இரவு களியாட்டம் முடிவடைகிறது. நன்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் மரத்தால் ஆன அரவான் சிற்பம் வைக்கப்பட்டு, கூத்தாண்டவர் கோயிலிலிருந்து நான்கு கி.மீ தூரத்தில் உள்ள கொலைக் களமான அமுதகளம் கொண்டு செல்லப்படுகிறான். வடக்கே உயிர் விடப்போகும் அரவானைப் பார்த்து திருநங்கைகள் ஒப்பாரி வைக்கின்றனர்.

அமுதகளத்தில் அரவான் தலை இறக்கப் படுகின்றது. திருநங்கைகள் அனைவரும் முதல்நாள் தாங்கள் கட்டிக்கொண்ட தாலி அறுத்து, பூ எடுத்து, வளையல் உடைத்து பின் வெள்ளைப் புடவை உடுத்தி விதவை கோலம் பூணுகின்றனர்.சித்ரா பவுர்ணமிக்கு மூன்று நாட்களுக்கு முன்பே இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து திருநங்கைகள் விழுப்புரம் வந்து விடுவர். இந்நிகழ்வு இந்தியாவின் பல பாகங்களில் இருந்து வரும் திருநங்கைளை ஒன்றிணைக்கும் விழாவாக அமைகிறது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு சில தளர்வுகளுடன் இருந்தாலும் வெளியூர்களுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும் கூத்தாண்டவர் கோயிலில் நிபந்தனைகளுடன் பூஜைகள் மட்டுமே நடந்தது. இதனால் அங்கு செல்ல முடியாத தூத்துக்குடி பகுதி திருநங்கைகள் நேற்று 3 சென்ட் பகுதியில் திருவிழா கோலத்தில் திரண்டனர். அங்கு கூத்தாண்டவர் முக உருவம் வைத்து கும்மியடித்து வழிபட்டனர்.பின்பு தாலி கட்டும் சடங்கிலும், தாலியறுப்பு  நிகழ்ச்சியும் நடத்தி ஒப்பாரி வைத்து வழிபட்டனர். பின்னர் வழிபாட்டின் ஒரு பகுதியாக திருநங்கைகளை முக்காடிட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.



Tags : Tuticorin , cannot ,reached,special, transgender ,people
× RELATED தூத்துக்குடியில் பணப்பட்டுவாடா செய்ததாக ஒருவர் கைது!!