×

குமரியில் 45 நாட்களுக்கு பின் தும்பு ஆலைகள் நாளை முதல் இயங்கும்: வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி நடைபெறுமா? தினமும் 10 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிப்பு

நாகர்கோவில்:  குமரி மாவட்டத்தில் தும்பு ஆலைகள் நாளை முதல் இயங்கும். சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 3ம் கட்ட ஊரடங்கு கடந்த 4ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில் சில கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் உள்ள ஆலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். கைகளை நன்றாக சுத்தம் செய்ய சானிடைசர், சோப்பு, தண்ணீர் வசதி இருக்க வேண்டும். அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.குமரி மாவட்டத்தில் கடந்த 4ம்தேதி முதல் வலை கம்பெனிகள் செயல்பட தொடங்கின. நேற்று  முன் தினம் (5ம்தேதி)  செங்கல் சூளைகள் இயங்க தொடங்கின. நேற்று (6ம்தேதி) ரப்பர் கையுறை  கம்பெனிகள் செயல்பட தொடங்கின. சுமார் 45 நாட்களுக்கு பின், நாளை (8ம்தேதி) முதல் தென்னை நார் ஆலைகள் இயங்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

குமரி மாவட்டத்தில் ராஜாக்கமங்கலம்,  ஈத்தாமொழி, முகிலன்குடியிருப்பு, அகஸ்தீஸ்வரம், சாமித்தோப்பு, மண்டைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் தும்பு ஆலைகள் அதிகமாக உள்ளன. மாவட்டத்தில் 25 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தென்னைகள் உள்ளன.  இங்கு தேங்காய் கதம்பையில் இருந்து தும்பு உற்பத்தி செய்யும் பிரதான தொழில் நடந்து வருகிறது. இந்த ஆலைகளில் இருந்து தினமும் ₹10 கோடி வரை தும்பு உற்பத்தி செய்யப்படுகிறது. மாவட்டத்தில் உற்பத்தியாகும் தும்புகள் பல மாநிலத்திற்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கொரோனா தடை உத்தரவால் தேங்காய் கதம்பை உற்பத்தி பாதிப்பு அடைந்தது. கடந்த 2 வருடங்களுக்கு முன் ஓகி புயல் காரணமாக பெரும் பாதிப்பை சந்தித்து இருந்த தும்பு ஆலைகள் இப்போது தான் மெல்ல, மெல்ல  அதில் இருந்து மீண்டு வர தொடங்கின. ஆனால் இப்போது 40 நாட்களுக்கு மேல் தடையால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. தும்பு ஆலைகள் இயங்காததால் கயிறு உள்ளிட்ட உற்பத்திகளும் தடை செய்யப்பட்டன.

இந்த நிலையில் வருகிற 8ம் தேதி முதல் தென்னை நார் ஆலைகள் இயங்கலாம் என கலெக்டர் அறிவித்து இருப்பது தொழிலாளர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
இதற்கிடையே தும்பு ஆலைகள் இயங்க தொடங்கினாலும் கூட இதன் பொருட்கள் ஏற்றுமதி தடையின்றி நடைபெற வேண்டும். வெளிநாடுகளுக்கு அதிகளவில் இங்கிருந்து ஏற்றுமதி நடைபெற தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும். கொரோனா பாதிப்பால் வெளிநாடுகளுக்கு உற்பத்தி பொருட்களை அனுப்ப முடியுமா? என்ற சந்தேகமும் தொழிலாளர்கள் இடையே ஏற்பட்டுள்ளது.



Tags : Kumari , Thumb mills, Kumari, exports , crores ,daily
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...