×

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மண்டூக மகரிஷிக்கு மோட்சம் வழங்குதல்

* அழகர்கோவிலில் நாளை நடக்கிறது * இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பு

மதுரை:  சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மண்டூக மகரிஷிக்கு மோட்சம் வழங்கும் நிகழ்வு நாளை, மதுரை அழகர்கோயிலில் கோயில் வளாகத்திற்குள்ளே நடத்தப்படுகிறது. இதனை கோயில் இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மதுரையின் மகுடத்திருவிழா என்ற பெருமைக்குரிய சித்திரை திருவிழா, கொரோனா பரவல் எதிரொலியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான, மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் 4 பட்டர்களால் கோயிலில் எளிமையாக நடத்தப்பட்டது. பக்தர்களுக்காக கோயில் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

 இதைப்போலவே, மதுரை அழகர்கோயிலில் சித்திரை பெருவிழா மே 3ல் தொடங்கி நடப்பதாக இருந்தது. அழகர் மதுரை வந்து, வைகையாற்றில் இறங்கி திரும்பும் அந்த முக்கிய நிகழ்வில் 10 லட்சத்திற்கும் அதிக பக்தர்கள் கூடுவர். தற்போது கொரோனா தொற்று பரவிவரும் சூழலில், மதுரைக்கு அழகர் வந்து திரும்பும் இந்த முக்கிய நிகழ்வு ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், திருவிழாவின் முக்கிய நிகழ்வான மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளித்தல், புராணம் வாசித்தல் மட்டும், கோயில் பட்டாச்சாரியார்கள், பணியாளர்களைக் கொண்டு உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி கோயில் உட்பிரகாரத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி நாளை இந்நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து மதுரை அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோயில் உதவி ஆணையர் அனிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: அழகர்கோயில் வளாகத்திற்குள்ளேயே ஆகம விதிப்படி விழா நடத்தப்படுகிறது. பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி, மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் அளிக்கும் மோட்ச புராணம் நடைபெறும். இதனை ‘www.tnhrce.gov.in’, ‘youtube temple live streaming’ மற்றும் ‘facebook’ (முகநூல்) மூலம் பொது மக்கள் மற்றும் பக்தர்கள் வீட்டிலிருந்தபடியே தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விழா நிகழ்ச்சி விபரம்
மே 8 - காலை 6 மணி: பெருமாள் ஆண்டாள் சன்னதி முன்பு எழுந்தருளல். காலை 8 மணி: எதிர்சேவை - அலங்கார சேவை. காலை 10 மணி: குதிரை வாகன சேவை. நண்பகல் 12 மணி: சைத்யோ உபச்சார சேவை. பிற்பகல் 1.30 மணி: சேஷ வாகனம். மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை கருட சேவை மோட்சம் புராணம், மாலை 6.30 மணி: புஷ்ப பல்லக்கு.



Tags : event ,festival ,Manduka Maharishi ,Madurai Chitra Festival Providing Moksha , Manduka ,Maharishi, , Madurai ,Chitra festival,
× RELATED நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்… புகைப்படத் தொகுப்பு!