×

ஸ்ரீவை.வடகாலில் தண்ணீர் வராததால் பேய்க்குளம் வறண்டது சாயர்புரம் அருகே 10 லட்சம் வாழைகள் கருகும் அபாயம்: விவசாயிகள் கவலை

ஏரல்: ஸ்ரீவைகுண்டம் வடகாலில் தண்ணீர் வராததால் சாயர்புரம் அருகே பேய்க்குளம் குளம் தண்ணீரின்றி வறண்டது. இதனால் 10 லட்சம் வாழைகள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே 312 ஏக்கர் பரப்பளவு கொண்ட பேய்க்குளம் குளத்தை நம்பி 3 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் நடந்து வருகிறது. வைகுண்டம் வடகால் வழியாக இக்குளத்திற்கு தண்ணீர் வருகிறது. கடைசி குளம் என்பதால் வாய்க்காலில் அதிக தண்ணீர் வந்தால் மட்டுமே குளத்திற்கு வரும்.இந்த குளத்தை நம்பி சாயர்புரம், நடுவக்குறிச்சி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நெல், வாழை பயிரிடுகின்றனர். வைகுண்டம் அணையிலிருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்கும் திட்டத்தால் பேய்க்குளத்திற்கு முறையாக தண்ணீர் வருவதில்லை. குளமும் மணல் மேடாகியுள்ளதால் மழை காலத்தில் அதிகளவு தண்ணீரை சேமிக்க முடிவதில்லை. தற்போது ஒரு போகம்தான் நெல் விளைச்சல் எடுக்க முடிகிறது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் நெல் பயிரிடுவதை விட்டு வாழைகளை அதிகளவு சாகுபடி செய்துள்ளனர்.

பேய்க்குளத்தை நம்பி இப்பகுதியில் 20 லட்சம் வாழைகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். தற்போது குலை தள்ளியும், குலை தள்ளும் நிலையிலும் உள்ளது. இந்நிலையில் வடகாலில் தண்ணீர் கடந்த 20 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது. அதற்குமுன் வாய்க்காலில் வந்த குறைந்தளவு தண்ணீரும் ஏரல் வரை கூட வரவில்லை. இதனால் குளம் வறண்டது. வாழை நன்று விளைந்து வருவதற்குள் தண்ணீரின்றி 10 லட்சம் வாழைத்தார்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாழைகளை காப்பாற்ற வழி தெரியாமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர். எனவே பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைகுண்டம் வடகால் வழியாக பேய்க்குளத்திற்கு தண்ணீர் கொண்டு வந்து வாழைகளை காப்பாற்றிட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பேய்க்குளம் நிலச்சுவன்தார்கள் அபிவிருத்தி சங்கம் பொருளாளர் சிவத்தையாபுரம் குணசேகரன் கூறியதாவது, பேய்க்குளம் குளம் மணல் மேடானதால் சேமித்து வைக்கும் தண்ணீர் 3 வாரங்களுக்கு கூட தாக்குப்பிடிக்க முடியாமல் வறண்டு விட்டது. தற்போது வாழைகள் குலை தள்ளி வரும் நிலையில் காய்கள் நன்கு விளைந்து வெட்டுவதற்கு தண்ணீர் தேவைப்படுகிறது. ஒருவருடம் சிரமப்பட்டு கடன் வாங்கி வாழையை வளர்த்து தார்கள் வெட்டு நிலையில் தண்ணீரின்றி வாழை கருகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். விவசாயிகளை காப்பாற்றிட வடகாலில் தண்ணீர் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.



Tags : Saiyapuram ,lake , water , lake, , Saiyapuram,farmers concerned
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு