×

வாளையார் செக்போஸ்டில் 5 கி.மீ. தூரம் காத்திருக்கும் சரக்கு லாரிகள்

கோவை:  கோவை வாளையார் செக்போஸ்டில் 5 கி.மீ. தூரத்திற்கு சரக்கு லாரிகள் காத்திருக்கின்றன. தமிழக-கேரளா எல்லையான கோவை வாளையார் செக்போஸ்ட் வழியாக சரக்கு வாகனங்கள் கேரளா மாநிலத்திற்கு சென்று வருகிறது.  வடமாநிலங்களில் இருந்தும் இந்த செக்போஸ்ட் வழியாக கேரளாவுக்கு சரக்கு லாரிகள் அதிகளவு செல்கிறது. முழு ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் கடந்த இரு நாட்களாக இந்த செக்போஸ்ட் வழியாக சரக்கு லாரிகள் சென்று வருவது அதிகமாகிவிட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, இரு மாநில எல்லையில் வாகனங்களை ஆய்வுசெய்து அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கடந்த இரு நாட்களாக வாளையார் செக்போஸ்ட்டில் இருந்து சந்திராபுரம் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சரக்கு லாரிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை இருக்கிறது. தமிழக எல்லைப்பகுதியில் லாரிகள் அதிக நேரம் காத்திருப்பதில்லை. ஆனால், கேரளாவில் இருந்து கோவை வரவேண்டிய லாரிகள் நீண்ட நேர காத்திருப்புக்கு பின்னர் அனுமதிக்கப்படுகின்றன. இரு மாநில எல்லை செக்போஸ்டில் வாகனங்களின் பதிவு எண் மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்படுகிறது. டிரைவர், கிளீனர் பெயர், முகவரி விவரங்கள் பெறப்படுகிறது. காய்ச்சல், சளி உள்ளதா? என சுகாதார துறையினர்  பரிசோதனை செய்கிறார்கள். இதன் காரணமாகவே காலதாமதம் ஏற்படுகிறது என செக்போஸ்ட் அதிகாரிகள் கூறினர்.

இது பற்றி லாரி டிரைவர்கள் கூறுகையில், “எங்களை பரிசோதனை செய்த பின்னர்தான் கேரளாவுக்குள் அனுமதிக்கிறார்கள். திரும்ப வரும்போதும் பரிசோதனை செய்கிறார்கள். சரக்கு மற்றும் டிரிப் சீட் விவரங்களை சரிபார்த்து அனுப்ப தாமதம் செய்கிறார்கள். உணவு, குடிநீர் கிடைக்காத பகுதியில் அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. விரைவாக ஆவணங்களை சரிபார்த்து, லாரிகளை அனுப்பிவைக்க வேண்டும்” என்றனர்.

Tags : checkpoint ,Valerie Checkpost , Valerie, Checkpost, 5 km ,Freight , distance
× RELATED தருமபுரி அருகே தொப்பூர் சோதனை சாவடியில் 16 கிலோ தங்கம் பறிமுதல்..!!