×

கொரோனா வைரசால் உலகில் உள்ள 100 கோடி மாற்றுத் திறனாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்: ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் வேதனை

நியூயார்க்: கொரோனா வைரசால் உலகில் உள்ள 100 கோடி மாற்றுத் திறனாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் வேதனையுடன் கூறினார். கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்குத் தெரியாத எதிரி, கிட்டத்தட்ட 200 உலக நாடுகளில் பரவி பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது எனறார். இந்த வைரஸ் தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 37 லட்சத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 58 ஆயிரத்தை தாண்டி விட்டது. இன்னும் கொரோனா வைரசின் கோரத்தாக்குதல் முடிவுக்கு வந்தபாடில்லை என குறிப்பிட்டார். இந்த கொரோனா வைரசால் ஏற்பட்டு வருகிற பாதிப்பு பற்றி ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுநோய் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது எனவும், குறிப்பாக உலகில் உள்ள 100 கோடி மாற்றுத் திறனாளிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள் என வீடியோவில் தெரிவித்தார். உடல் ரீதியிலான குறைபாடு உள்ளவர்கள், ஏற்கனவே வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கிற நிலையில், வன்முறைகள், புறக்கணிப்புகள், துஷ்பிரயோகம் போன்ற புதிய அச்சுறுத்தல்களையும் சந்தித்து வருகிறார்கள் என கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்று, உடல் ரீதியில் குறைபாடு இருப்பவர்களை தாக்கினால், அவர்களது உடல்நிலை மிகவும் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன என சுட்டிக்காட்டினார். அது மரணத்தில் முடியவும் வாய்ப்பு இருக்கிறது எனவும் கூறினார். பராமரிப்பு இல்லங்களில் வாழ்ந்து வருவோரில் வயதானவர்களும், உடல் குறைபாடுகள் உள்ளவர்களும் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அந்த வகையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இறப்புகளில் அவர்களது பங்களிப்பு 19 சதவீதத்தில் இருந்து ஆச்சரியப்படத்தக்க வகையில் 72 சதவீதம் வரையில் இருக்கிறது. சில நாடுகளில் சுகாதார வசதிகளை மதிப்பிடுவது தொடர்பான முடிவுகள் பாரபட்சமான அளவுகோல்களை அடிப்படையாக கொண்டவை ஆகும். இதை நாம் தொடர அனுமதிக்க முடியாது. உடல் ரீதியில் குறைபாடு உடையவர்களும், மற்ற மனிதர்களைப்போல சம உரிமைகள் பெறுவதற்கு நாம் உத்தரவாதம் அளிக்க வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவி வருகிற இந்த காலகட்டத்தில் அவர்களுக்கும் போதிய சுகாதார பராமரிப்பும், உயிர் காக்கும் நடைமுறைகளும் கிடைக்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags : Antonio Gutierrez ,World ,UN , World's ,100 million transplants, severely affected, coronavirus,UN General Secretary Antonio Gutierrez, tormented
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில்...