×

ஆசனூர் அருகே பரபரப்பு இருசக்கர வாகனங்களை துரத்திய காட்டு யானை: செல்போனில் படம் எடுத்ததால் விபரீதம்

சத்தியமங்கலம்: ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாைலயில் ஒற்றை காட்டு யானை இருசக்கர வாகனங்களை துரத்தியதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான் உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம்- கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது சாலையை கடந்து செல்வது வழக்கம். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் ஒரு சில வாகனங்கள் மட்டுமே சாலையில் பயணிக்கின்றன. இதன் காரணமாக, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் பகல் நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் ஹாயாக சுற்றித் திரிகின்றன. நேற்று காலை ஆசனூர் அருகே சாலையோரம் ஒற்றை காட்டு யானை சுற்றித்திரிந்தது. அப்போது, அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் ஒற்றை யானையை அருகே நின்று பார்த்ததோடு செல்போனில் புகைப்படம் எடுக்க முயன்றனர். இதைப்பார்த்த ஒற்றை காட்டு யானை பிளிறியபடி இருசக்கர வாகனத்தை சிறிது தூரம் துரத்தியது.

யானை துரத்துவதை கண்ட வாகன ஓட்டிகள் வாகனத்தை வேகமாக இயக்கி தப்பித்தனர். பின்னர், யானை சாலையின் நடுவில் நின்றுகொண்டு ஆத்திரத்துடன் அங்குமிங்கும் சுற்றித்திரிந்தது. இது குறித்து தகவலறிந்த ஆசனூர் வனத்துறையினர் சாலையோரம் சுற்றித்திரியும் யானைகளின் அருகே நின்று தொந்தரவு செய்யக்கூடாது என வாகன ஓட்டிகளிடம் அறிவுறுத்தினர்.

Tags : Asanur Wild elephant , Wild elephant , two-wheeler ,Asanur,
× RELATED மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க...