×

மத்திய அரசுக்கு சோனியா கேள்வி மே 17க்குப் பிறகு என்ன செய்ய உத்தேசம்? காங்கிரஸ் முதல்வர்களுடன் ஆலோசனை

புதுடெல்லி: ‘‘மே 17ம் தேதிக்கு பிறகான மத்திய அரசின் திட்டம் என்ன? எவ்வளவு காலத்திற்கு ஊரடங்கை நீட்டிப்பது என்பதை தீர்மானிக்க என்ன அளவுகோலை அரசு கடைபிடிக்கிறது?’’ என காங்கிரஸ் முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சோனியா காந்தி கேள்வி எழுப்பினார்.
கொரோனா பாதிப்பால் 2 கட்டமாக விதிக்கப்பட்ட 40 நாள் ஊரடங்கு 3ம் கட்டமாக மேலும் 14 நாட்களுக்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பில் தற்போதைய நிலவரம் மற்றும் ஊரடங்குக்குப் பிறகான பணிகள் தொடர்பாக காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று ஆலோசனை நடத்தினர்.

இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், வீரப்ப மொய்லி, தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், இக்கட்டான இச்சூழலிலும் அதிகப்படியான கோதுமை விளைச்சலை தந்து, உணவு பாதுகாப்பை உறுதி செய்ததற்காக விவசாயிகளுக்கு குறிப்பாக பஞ்சாப், அரியானா விவசாயிகளுக்கு சோனியா நன்றி தெரிவித்தார். மேலும், மே 17ம் தேதிக்குப் பிறகான திட்டமிடல் என்ன? எவ்வளவு காலத்திற்கு ஊரடங்கை நீட்டிப்பது என்பதை தீர்மானிக்க மத்திய அரசு என்ன அளவுகோலை கையாள்கிறது? என கேள்வி எழுப்பியதாக தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா கூறினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், ‘‘ஊரடங்குக்குப் பிறகான மத்திய அரசின் திட்டம் என்ன என்பதை மாநில அரசுகள் கேட்டு அறிய வேண்டியது அவசியம்’’ என்றார்.

‘‘கோவிட் 19ஐ எதிர்த்து போராடுவதின் மையப்பகுதியில் நீரிழிவு, இதய நோய் உள்ள முதியவர்களை பாதுகாப்பது அவசியம்’’ என ராகுல் கூறினார்.
இதில் பேசிய காங்கிரஸ் முதல்வர்கள், மத்திய அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினர். பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் பேசுகையில், ‘‘கள நிலவரம் தெரியாமல் மத்திய அரசு மண்டலங்களை பிரிப்பது கவலையாக இருக்கிறது’’ என்றார். இதேபோல, புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி பேசுகையில், ‘‘மாநிலங்களுடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல் மத்திய அரசு கோவிட்-19 மண்டலங்களை அறிவித்து வருகிறது. இது முரண்பாடான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது’’ என்றார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பேசுகையில், ‘‘விரிவான பொருளாதார  நிதி தொகுப்பு வழங்காமல் நாடும், மாநிலமும் எவ்வாறு இயங்க முடியும்? எங்களுக்கு ரூ.10,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பிரதமர் மோடியிடம் பல மாநிலங்களும் பலமுறை பொருளாதார நிதியை கேட்டு விட்டன. ஆனால் அரசு தரப்பில் இதுவரை பதிலளிக்கப்படவில்லை’’ என்றார். மேலும் இக்கூட்டத்தில், வெவ்வேறு பகுதியில் சிக்கித் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அழைத்து வருவதில் மாநிலங்கள் எடுத்துள்ள நடவடிக்கை குறித்தும் சோனியா காந்தி கேட்டறிந்தார். முன்னதாக கடந்த திங்கட்கிழமை, வெளிமாநில தொழிலாளர் சொந்த ஊர் திரும்ப ரயில் டிக்கெட் கட்டணத்தை மத்திய அரசு கேட்பதை விமர்சித்த சோனியா காந்தி, அதனை காங்கிரஸ் கட்சி செலுத்துவதாக அறிவித்தார்.

எனவே மாநில அரசுகள் தொழிலாளர்கள் டிக்கெட் கட்டணத்தை செலுத்த முடிவெடுக்க வேண்டும் என்றும், அதற்கான சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறையிடம் கோரிக்கை விடுக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.  இதற்கு பதிலளித்த பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், ‘‘டிக்கெட் கட்டணத்திற்காக ரூ.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு தொழிலாளிக்கு ரூ.870 டிக்கெட் கட்டணமாக ரயில்வே வசூலிக்கிறது’’ என்றார்.

வரி உயர்த்துவது கொடூரமானது
பெட்ரோலிய பொருட்கள் மீது மத்திய அரசு வரி உயர்த்தியிருப்பது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், ‘‘மத்திய அரசு தனது நிதிப்பற்றாக்குறையை பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டும். ஊரடங்கால் பொருளாதாரம் சரி்ந்து கிடக்கும் இந்த சூழலில் அதிகமான வரிகளை விதிக்கக் கூடாது. பொருளாதார வளர்ச்சி நல்ல நிலையில் இருக்கும்போது புதிய வரி விதிக்கலாம், வரியை உயர்த்தலாம். ஆனால் இப்போது வரி விதிப்பது கொடூரமானது. ஏற்கெனவே துன்பத்தில் இருக்கும் நடுத்தர மக்கள், ஏழைகளை இந்த வரிச்சுமை வேதனைப்படுத்தும், ஏழ்மையில் தள்ளும். மக்களுக்கு பணத்தை நேரடியாக தர வேண்டிய நிலையில் அவர்களிடம் இருந்தே பணத்தை எடுப்பது, கொடுமை’’ என்றார்.

ராகுல் கண்டனம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ‘‘கொரோனா பாதிப்பால் கடுமையான பொருளாதார சிக்கலில் மக்கள் சிக்கித் தவிக்கும் இந்த நேரத்தில் விலையை குறைப்பதற்கு பதிலாக மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான விலையை லிட்டருக்கு ரூ.10-13 வரை உயர்த்தியிருப்பது நியாயமற்றது. அதை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.’’ என்றார்.

Tags : Government ,Central ,Sonia ,Congress ,chiefs , Central government, Sonia, Congress chiefs
× RELATED கொரோனாவை பயன்படுத்தி மத்திய அரசு...