×

மாநகராட்சி பணியாளர்களை போல ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிவாரண நிதி: திமுக சார்பில் மாநகராட்சி ஆணையருக்கு கடிதம்

சென்னை: மாநகராட்சி பணியாளர்களை போல ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று திமுக சார்பில் மாநகராட்சி ஆணையருக்கு கே.எஸ்.ரவிச்சந்திரன் எம்எல்ஏ கடிதம் எழுதியுள்ளார். எழும்பூர் திமுக எம்எல்ஏ கே.எஸ்.ரவிச்சந்திரன் மாநகராட்சி ஆணையர் பிரகாஷூக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மண்டலம் 5ல் 58, 61வது வார்டு, மண்டலம் 6ல் 77, 78 வார்டு, மண்டலம் 8ல் 104 மற்றும் 107 ஆகிய வார்டுகளில் இன்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 253. பெரியமேடு, தட்டாங்குளம், கே.பி. பூங்கா குடிசை பகுதி ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் பாதுகாக்கப்பட்ட பகுதியில் உள்ள அனைவருக்கும் போர்க்கால அடிப்படையில் பரிசோதனை செய்ய வேண்டும்.

அதேபோல அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நிவாரண பொருட்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வசிக்கும் இடமான தட்டாங்குளம், குறவன் குளம் ஆகிய பகுதிகளில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கொரோனா தொற்று நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, இப்பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

மாநகராட்சி பணியாளர்களுக்கு கொரோனா தொற்று நோய் ஏற்பட்டால் அவர்களுக்கு அரசின் சார்பில் நிவாரண நிதியாக ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது. அதேபோல, தற்சமயம் மாநகராட்சி பணிகளுக்கு ஒப்பந்த தொழிலாளர்கள் (என்யுஎல்எம்) தங்களின் உயிரை பணயம் வைத்து அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். ஆகவே, அவர்களுக்கு கொரோனா தொற்று நோய் ஏற்பட்டால் அரசின் சார்பில் நிவாரண நிதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Corporation Employees ,DMK ,Contract Workers ,Contract Employees ,DMC , Corporation employees, contract workers, DMK, Municipal Commissioner
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்