×

நீதிபதி வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் உட்பட15 போலீசாருக்கு ஒரேநாளில் கொரோனா: சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 56 ஆக உயர்வு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் உட்பட 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.  இதையடுத்து சென்னை மாநகரில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட போலீசார் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசார் இடையே கொரோனா தொற்று அதிகமாக காணப்படுகிறது.  இதையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசார் டிஜிபி உத்தரவுப்படி பிசிஆர் பரிசோதனை செய்து வருகின்றனர். இந்த பரிசோதனையில் பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சென்னை அடுத்த பாலவாக்கத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் வீட்டில் கடந்த 6 மாதங்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த ஆயுதப்படை காவலர் ஒருவருக்கு நேற்று நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த காவலரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருடன் பணியாற்றி வந்த சக காவலர்களையும் அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர். தமிழக டிஜிபி அலுவலகத்தில் தொழில்நுட்ப பிரிவு இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் என 8 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அனைவரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் அவர்களின் குடும்பத்தினர், உடன் பணியாற்றும் போலீசாரையும் அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர். அதேபோல், ஊரடங்கு நேரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் குடும்பங்களுக்கு மாநகர காவல்துறை சார்பில் காய்கறிகள் மொத்தமாக கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து கொள்முதல் செய்து புதுப்பேட்டை ஆயுதப்படை அங்காடியில் வைத்து விற்பனை செய்யப்பட்டது.

மேலும் வாகனங்களில் காவலர்கள் குடியிருப்பிலும் காய்கறிகள் ஆயுதப்படை போலீசார் நேரடியாக விற்பனை செய்து வந்தனர். அந்த வகையில் புதுப்பேட்டை காவலர் காய்கறி அங்காடியில் பணியாற்றி வந்த காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்காலிகமாக காவலர் காய்கறி அங்காடி கிருமி நாசினி தெளித்து மூடப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் புதுப்பேட்டை காவலர் காய்கறி அங்காடியில் காய்கறிகள் வாங்கி சென்ற காவலர் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். காய்கறிகள் வாங்கியவர்கள் குறித்த பட்டியலையும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இணைந்து பட்டியல் எடுத்து தனிமைப்படுத்தி வருகின்றனர்.  

அதேபோல், சூளைமேடு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் உதவி ஆய்வாளர்  மற்றும் ஆயுதப்படை காவலருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. அவரது குடும்பத்தினர் மற்றும் உடன் பணியாற்றிய காவலர்களை அதிகாரிகள் தனிமைப்படுத்தி உள்ளனர். அண்ணாநகர் துணை கமிஷனரின் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. மேலும், சென்னையில் கூடுதல் போலீஸ் கமிஷனராக பணியாற்றி வரும் ஒருவரின் பாதுகாப்பு காவலருக்கும், மற்றொரு போலீஸ்காரருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இருவரின் தொடர்பில் இருந்தவர்கள் யார் யார் என விசாரித்து தனிமைப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று வரை சென்னை மாநகரில் காவல் துறையில் பணியாற்று வரும் 56 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரின் குடும்பங்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இதற்கிடையே சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மைய உணவகத்தில் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து உணவு தயாரிப்பு ஊழியருடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


Tags : policemen ,home ,judge ,security guard , Judge, Guard, Corona, Madras
× RELATED காவலர்கள் மீது தாக்குதலுக்கு தேமுதிக கண்டனம்