×

200 கிமீ நடந்து வந்த இளைஞருக்கு மரத்தில் 14 நாள் கட்டாய தனிமை: ராஜஸ்தானில் நடவடிக்கை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து சொந்த ஊருக்கு நடந்து வந்த இளைஞர் அங்குள்ள மரத்தில் 14 நாள் தனிமைப்படுத்தப்பட்டார். ராஜஸ்தானின் செர்புரா கிராமத்தை சேர்ந்தவர் கமலேஷ் மீனா. இவர் அஜ்மீர் மாவட்டம் கிஷான்கார் பகுதியில் தங்கி பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கொரோனா பாதிப்பை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 16ம் தேதி சொந்த ஊருக்கு கால்நடையாக நடந்து வந்தார். சுமார் 200 கிமீ தொலைவை கடந்து  சொந்த ஊர் வந்த அவரை ஊர் பொதுமக்கள் கொரோனா அச்சத்தில் ஊருக்குள் அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவரை பில்வாராவில் 14 நாள் தனிமைப்படுத்த சுகாதார பணியாளர்கள் திட்டமிட்டனர்.  ஆனால் ஊர் மக்கள் கமலேஷ் மீனாவை குடியிருப்புக்கு வெகு தொலைவில் உள்ள வயல்வெளியில் தங்க ஏற்பாடு செய்தனர்.

இதையடுத்து அங்கு மரத்தில் மூங்கிலால் ஒரு குடிசை அமைக்கப்பட்டு அவரை தனிமைப்படுத்தினர். அவருக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அவரது தந்தை சாகர்மால் வழங்கி வந்தார். இந்நிலையில் கமலேஷ் மீனாவின் உடல் நிலையை தினமும் டாக்டர்கள் குழு சோதனை செய்தது. இதையடுத்து 14 நாட்கள் நிறைவடைந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று எதுவும் இல்லாததை உறுதி செய்த டாக்டர்கள் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ராஜஸ்தான் மாநிலத்தில் 3,158 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. கொரோனா வைரசுக்கு 89 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Rajasthan ,walk , Youth, compulsory loneliness, Rajasthan, Corona
× RELATED ராஜஸ்தானுக்கு 5வது வெற்றி: பஞ்சாப் கிங்ஸ் ஏமாற்றம்