×

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு: இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்பு

ரோம்: கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவின் வுகானில் இருந்து பரவத்தொடங்கி கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தற்போது சர்வதேச அளவில் 200 நாடுகளில் பரவி வருகிறது. வைரஸ் தொற்று காரணமாக ஒவ்வொரு நாட்டிலும் கொத்து கொத்தாக மனித உயிர்கள் பலியாகி வருகின்றன. கொரோனா வைரசுக்கு எதிராக மருந்தை கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் பலவும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் மனித செல்களில் ஊடுருவியுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்தக்கூடிய தடுப்பூசியை கண்டறிந்துள்ளதாக இத்தாலி அறிவித்துள்ளது.

ரோம் நகரின் டாகிஸ் நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக மருந்தை கண்டறியும் ஆராய்ச்சியில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு இருந்தனர். ஸ்பாலான்சானி என்ற மருத்துவமனையில் எலிகளை பயன்படுத்தி இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆராய்ச்சியின் முடிவில் மனித உயிரணுக்களில் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டு தடுப்பூசிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், “தடுப்பூசியை சோதனை செய்வதற்கு எலிகள் பயன்படுத்தப்பட்டன. தடுப்பூசிக்கு பிறகு எலிகளில் உள்ள செல்கள் வைரசுக்கு எதிரான எதிர்செல்களை உருவாக்கி கொண்டுள்ளது.

இதேபோன்று மனித உயிரணுக்களிலும் வைரஸ் தொற்றுக்கு எதிராக எதிர்செல்களை தடுப்பூசிகள் உருவாக்கும். இதன் மூலம் வைரசானது மனித உயிரணுக்களில் மேலும் அதிகரிக்காமல் கட்டுப்படுத்தப்படும். குறிப்பாக கொரோனா வைரசால் பாதிக்கப்படக்கூடிய நுரையீரல் உயிரணுக்களில் வைரசுக்கு எதிராக எதிர்சக்திகளை உருவாக்குவதற்கு இந்த தடுப்பூசிகள் பயன்படும்” என்றனர். டாகிஸ் நிறுவன சிஇஒ லுயிஜி அவுரிசிசியோ கூறுகையில், ‘‘தடுப்பூசியை உருவாக்கும் செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக சர்வதேச அளவில் ஒத்துழைப்பு தருவதற்கு நிறுவனம் தயாராக உள்ளது” என்றார்.

200 உருமாற்றங்கள்
இங்கிலாந்தில் லண்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 7,500க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து மாதிரிகளை சேகரித்து பகுப்பாய்வு செய்தனர். இதில் கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் நோய் தொற்றை உருவாக்கும் சார்ஸ் கோவிட் 2ல் ஏறத்தாழ 200 உருமாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 2019ம் ஆண்டின் பிற்பகுதியில் மட்டுமே வைரஸ் தோன்றியுள்ளதாக ஆராய்ச்சிகள் உறுதிபடுத்தியுள்ளன. 198 உருமாற்றங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அனைத்து வைரஸ்களும் இயற்கையாகவே தோன்றியுள்ளன என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


Tags : Italian ,researchers ,Corona ,Researchers Announcement , Corona, vaccine, researchers in Italy
× RELATED சாம்பியனை வீழ்த்திய கமீலா