×

இறப்பு விகிதம் குறைந்து வருகிறது கொரோனா போரில் அமெரிக்கா அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது: அதிபர் டிரம்ப் உற்சாகம்

வாஷிங்டன்: அமெரிக்கா கொரோனாவுக்கு எதிரானப் போரில் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் நகரில் உள்ள முகக்கவசம் தயாரிக்கும் ஹனிவெல் தொழிற்சாலையை பார்வையிட்ட பின்னர் அதிபர் டிரம்ப் கூறியதாவது: கொரோனா பாதிப்பினால் இதுவரை 71 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். 12 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதித்துள்ளனர். இருப்பினும் இறப்பு விகிதம் கடந்த ஒரு வாரமாக குறைந்து வருகிறது. இதுவொரு நல்ல மாற்றத்துக்கான அறிகுறியாகும். கொரோனாவுக்கு எதிரானப் போரில் நாடு தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. ஆனால் இது மிகவும் பாதுகாப்பான கட்டமாகும்.

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் வினியோகத்தை உறுதிப்படுத்தவும் அரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா விடுதலையடைந்து விட்டது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன், வாஷிங்டன் அரசியல்வாதிகள் அதனை வெளிநாடுகளுக்கு விற்று விட்டனர். ஆனால் அமெரிக்கா, அமெரிக்கர்களுக்கே என்ற தாரக மந்திரத்தின் மூலம் நாம் அதனை திரும்ப பெற்று வருகிறோம். இதனால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். அமெரிக்கர்கள் போர் வீரர்களாவர். அவர்களின் உதவியுடன் கொரோனா விரட்டியடிக்கப்படும். அதன் பின்னர் அமெரிக்கர்களின் இதயம், கைகள், ஆன்மா, பெருமை ஆகியவற்றை கொண்டு எதிர்கால அமெரிக்கா கட்டி எழுப்பப்படும்.

கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அனைத்தும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டவர்களுக்கும் பழங்குடியினருக்கும் வேறு எந்தவொரு அரசும் செய்யாததை, செய்து கொடுக்கப்பட உள்ளது. ஆனால் அதற்கான பணி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அது நிறைவேற்றப்பட்டதும் பணி முடிவடைந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.

‘பரிசோதிக்காமலே பயன்பாடு’
அமெரிக்காவின் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் பிரிவின் கீழ் செயல்படும் நுண்ணுயிரி சிறப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் தலைவராக இருந்தவர் ரிக் பிரைட். இவர் இந்தியா, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 5 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துகளை அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் ஆய்வுக்கு உட்படுத்தாமல் பயன்படுத்தியது தவறு என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் பிரிவின் இணை செயலர் ராபர்ட் கேட்லெக்கிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் ஆனால் அரசோ, அவரது துறைத் தலைவர்களோ, மருத்துவ நிபுணர்களோ அதுகுறித்து கவலைப்படாமல் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் அவசரத்துக்காக பயன்படுத்தும் அனுமதி பெற்று அதனை சந்தையில் வெளியிட்டதாக புகார் கூறியுள்ளார். வேறு வழி தெரியாததால், இறுதியில் ஊடகங்களுக்கு இதனை தெரிவிக்க முடிவு செய்ததாக குறிப்பிட்டார்.

Tags : Trump ,war ,Corona ,phase , Death Rate, Corona, USA, Trump
× RELATED கிரிமினல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் டிரம்ப் ஆஜர்