×

கடன் வாங்க ஆளில்லையா?, தரவில்லையா? ரிசர்வ் வங்கியில் முடங்கிக் கிடக்கும் வங்கி டெபாசிட் 8.42 லட்சம் கோடி

புதுடெல்லி: ரிசர்வ் வங்கியில் பொதுத்துறை வங்கிகளின் பணம் 8.42 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இது கடன் தேவை குறைந்ததையும், வங்கிகள் கடன் வழங்க தயக்கம் காட்டுவதையும் ஒரு சேர வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.  கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு 3வது முறையாக நீட்டிக்கப்பட்டு, வரும் 17ம் தேதி வரை அமலில் உள்ளது. ஊரடங்கால் தொழில்துறைகள் முடங்கியுள்ள நிலையில், வங்கிகள் கடன் வழங்குவதை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் வலியுறுத்தி வருகின்றன. இதற்கேற்ப ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது.  ஆனால், வங்கிகளின் கடன் வழங்கல் எதிர்பார்த்த அளவுக்கு நடைபெறவில்லை என்பது, ரிசர்வ் வங்கியில் வங்கி வைத்துள்ள உபரி டெபாசிட் மூலம் தெரிய வந்துள்ளது.

சமீபத்திய புள்ளிவிவரப்படி, ரிசர்வ் வங்கியில் வங்கிகளின் 8.42 லட்சம் கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.   இதற்கு முன்பு, சுமார் ₹7 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டிருந்ததே அதிகபட்ச அளவாக இருந்தது. ஆனால், இதுவரை இல்லாத அளவுக்கு ரிசர்வ் வங்கியில் வங்கிகளின் உபரி பணம் டெபாசிட்  செய்யப்பட்டுள்ளது.  கொரோனாவால் சரிந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்த தொழில்துறைகளுக்கு கடன் வழங்க சிறப்பு கடன் திட்டத்தை, பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, பாங்க் ஆப் பரோடா, யூனியன் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் அறிவித்தன. இருப்பினும் பலன் இல்லை என்றே கூறப்படுகிறது.

 இதுகுறித்து வங்கி அதிகாரிகள் சிலர் கூறுகையில், ‘‘கொரோனாவால் தொழில்துறைகள் ஸ்தம்பித்துள்ளன. மீண்டும் தொழிலை தொடங்குவதற்கான மனநிலைக்கு அவை வரவில்லை. அவசர தேவை இருந்தாலும், சூழ்நிலைகள் சரியாவதற்காக காத்திருக்கின்றனர். எனவே அவசரப்பட்டு யாரும் கடன் வாங்க விரும்பவில்லை. இயல்பு நிலை திரும்பி விட்டால் கடன் தேவை அதிகரிக்கும் என நம்புகிறோம்’’ என்றார். இதுதவிர, வருவாய் பாதித்துள்ள இந்த சூழ்நிலையில், கடன் வழங்கினால் திரும்பவும் வருமா? அல்லது வராக்கடனாக மாறுமா என்ற அச்சமும் வங்கித்துறையினரிடம் காணப்படுகிறது.
 பொருளாதார நிபுணர்கள் சிலர் கூறுகையில், ‘‘உபரி நிதி தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டிய தருணம் இது. வங்கிகள் உபரியாக உள்ள பணத்தை அதிகமாக டெபாசிட் செய்தால், வங்கிகளிடம் கட்டணம் வசூலிக்கும் முடிவுக்கு ரிசர்வ் வங்கி வர வேண்டும். அதோடு, அரசின் உத்தரவாதமும் தேவை’’ என்றனர்.

Tags : RBI bank ,Reserve Bank , Credit, Reserve Bank, Bank Deposit
× RELATED மார்ச் 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று...