12 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட ஹிஸ்புல் தீவிரவாதி ரியாஸ் சுட்டுக்கொலை

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஹிஸ்புல் தீவிரவாதி ரியாஸ் சுட்டுக்கொல்லப்பட்டான்..

ஜம்மு காஷ்மீரின் ஹந்த்போராவில் 2 ராணுவ அதிகாரிகள் உட்பட 8 பேர் தீவிரவாதிகள் தாக்குதலில் கடந்த 3 நாட்களுக்கு முன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஷர்ஷாலி கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். பதிலுக்கு வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தொடர்ந்து தீவிரவாதிகளை  தேடும்  பணியில் வீரர்கள்  ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் அவந்திபோராவின் பெயிக்போராவில் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த ரியாஸ் நைகோ சுட்டுக்கொல்லப்பட்டான். அங்கிருந்து தப்ப முயன்ற அவனது கூட்டாளியையும் வீரர்கள் சுட்டுக்கொன்றனர். கொல்லப்பட்ட ரியாஸ் நைகோ(32) தலைக்கு 12 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு இருந்தது. போலீஸ் காவலில் இருந்து 3 முறை தப்பி சென்றவன். பாதுகாப்பு படையினர் மீது கல்வீச்சில் ஈடுபட்டது உள்பட பல்வேறு சம்பவங்களில் தொடர்புடையவன். கடந்த 8 ஆண்டுகளாக போலீசாரால் தேடப்பட்டு வந்தவன்.

Related Stories: